கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்தப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்..

காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் விஜயன் சொன்னபோதே இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று தோன்றியது.

இஸ்பேட் ராஜா படத்தில் என்னுடைய நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.. ஆனாலும் தமிழில் அறிமுக நடிகையாக என்னுடைய முதல் படமான இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தது உண்மையிலே மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்த சமயத்தில் தமிழில் என்னுடைய படங்கள் கூட வெளியாகவில்லை.. ஆடிஷனில் கலந்துகொண்ட பின் தான் எனக்கும் இந்தப்படத்தில் நம்பிக்கை வந்தது.

இயக்குனரை முதலில் சந்தித்தபோதே பொட்டு இல்லாத என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என சற்று தயக்கத்துடன் பார்த்தார். நான் உடனே உதவி இயக்குனரிடம் பேனா வாங்கிச்சென்று சில நொடிகளில் முகத்தில் பொட்டுடன் வந்து நின்றேன்.. அப்போதுதான் இயக்குனர் முகம் பிரகாசமானது. இருந்தாலும் நான்கைந்து முறைக்கும் மேல் ஆடிஷன்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. காரணம் எனது கதாபாத்திரம் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.

கதைப்படி எனது பாட்டி சச்சு ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது.. என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும்.. ஆனால் சச்சும்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும்.. சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமக்கப்பட்டதால் இரண்டு கேரக்டர்களுக்குமான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகி விட்டது.

இதற்காகவே சச்சும்மா நடிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பை கூர்ந்து கவனித்து வந்தேன். நான் அப்படி கவனித்தேன் என்பது கூட இப்போதுவரை அவருக்கு தெரியாது. இதில் சச்சுவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு.. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்து இன்னொரு அதிர்ஷ்டம் தான்.. இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை இதில் கொடுக்க வேண்டி இருந்தது.. அதேசமயம் இயக்குனர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

அடுத்தடுத்த படங்கள் குறித்து கூறும்போது, “தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறேன்.. தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும் எல்லாமே லவர் கேர்ள் கதாபாத்திரங்களாகவே வருகின்றன. பெரும்பாலும் நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்கள் போலவே வருவதால் அவற்றை தவிர்த்து விடுகிறேன்.. நடிப்பில் புகுந்து விளையாடும் சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

Leave a Reply

Your email address will not be published.