தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார்.

தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திரா பக்கம் கிளம்பத் தயாராகி வருகிறார்.

இந்தநிலையில் மாமனிதன், கும்கி-2 படங்கள் மட்டுமல்லாது பாலா இயக்கிய வர்மா படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சுகுமார்.

“யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் கும்கி படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக கும்கி-2 படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள்..

யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் கும்கி 2 படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம். முக்கால்வாசி கதைக்கு மேல் வனப்பகுதியிலேயே நடைபெறுவதால் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும்..

பொதுவாக யானைகளை ஏதாவது வண்டியில் ஏற்றித்தான் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.. ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிக்கோ மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட ஜீப்பில் பயணித்தாலே ஒன்றரை மணி நேரம் ஆகும்.. பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் யானையை நடத்தி கூட்டிச்செல்ல குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது.

அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடத்த துவங்குவோம். இந்த பயணத்தின்போது வேறு காட்டு யானைகள் வந்து விடும் அபாயமும் இருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கு மேற்பட்ட ஆட்களை பாதுகாப்புக்காக தினசரி அழைத்துச் செல்வோம்.

இந்தப்பகுதியில் 40 நாட்கள் நாங்கள் தங்கியிருந்தபோது நல்ல இயற்கையான சாப்பாடு, சுத்தமான, மூலிகை அம்சங்கள் கொண்ட குடிநீர் என ஒரு புது வாழ்க்கை வாழ்ந்தது போல இருந்தது. கும்கி படத்தை எடுத்த சமயத்தை விட, தற்போது முன்னேறியுள்ள தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ள கைகொடுத்தது.

அதேசமயம் அவற்றை பயன்படுத்தி மொத்த படப்பிடிப்பையும் எந்தவித செயற்கை ஒளியும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே படமாக்கி இருக்கிறோம்.. இயக்குநர் பிரபுசாலமன் கூட கும்கி படத்தை விட இதில் நமக்கு தாராளமாக செலவு செய்ய இன்னும் அதிகமாகவே பட்ஜெட் இருக்கிறது.. நீங்கள் இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கூறியபோது வேண்டாமென திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்..

காரணம் இந்த கதைக்கு இயற்கையான ஒளி இன்னும் வலுவூட்டுவதாக இருக்கும் என்பதால் ஒரு டார்ச்லைட் ஒளியைக் கூட இதில் பயன்படுத்தவில்லை.. இதை பரிசோதனை முயற்சியாக என்று சொல்வதை விட, இந்த படத்திற்கு தேவைப்பட்டதாலும் அதேசமயம் இப்படியும் கூட படமாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்..

இதனால் படப்பிடிப்பு நேரம் எங்களுக்கு ரொம்பவே மிச்சமானது.. இயக்குநர் பிரபு சாலமனின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் இது சாத்தியமானது.. அதேசமயம் இந்த படத்தில் வி எஃப் எக்ஸ் பணிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.. கலகலப்பாக நகைச்சுவையாக நகரும் படம் என்றாலும் இதில் சென்டிமென்ட்டுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றுகிறேன். இது தர்மதுரை மாதிரியான கதை அல்ல.. வேறு விதமான கதை..

அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..

இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும் காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இந்த இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும்.. அப்படி கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்றுதான் உறுதியாக சொல்வேன்.. அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..

இந்தப்படத்திலும் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளோம். படத்தில் குறிப்பிட்ட நான்கு காட்சிகளை மட்டும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம்.. ஒவ்வொரு காட்சியும் சுமார் நான்கு நிமிடத்துக்கு குறையாத நீளம் கொண்டவை.. அவற்றை ஒரே டேக்கில் படமாக்கி இருக்கிறோம்.. காரணம் அந்தக்காட்சிகளை அப்படி ஒரே ஷாட்டில் சொன்னால் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி விரும்பினார்..

இதை பல ஷாட்டுகளாக பிரித்து வழக்கம்போல ஏன் எடுக்கவேண்டும் ஒரே ஷாட்டில் எடுக்கலாமே என்று எனக்கு இந்த புதிய முயற்சியை பரீட்சித்து பார்க்க ஊக்கம் தந்தார்.. பக்காவான ரிகர்சல் பார்த்துவிட்டு சென்றதால் ஒரே டேக்கில் பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய்சேதுபதியும் காயத்ரியும்.

அப்படி இந்த காட்சியை படமாக்குவதற்காக பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அன்று இரவே பக்கத்தில் இருந்த இன்னொரு லொக்கேசனுக்கு மாறினோம்.. படக்குழுவினரும் எப்படியும் முதல் ஷாட்டே எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும் நள்ளிரவில் தான் படப்பிடிப்பு முடியும் என அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர்.

ஆனால் ஏழரை மணிக்கு ஷாட் வைத்து கிட்டத்தட்ட எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டோம்.. நாங்கள் ஒரே ஷாட்டில் இந்த நான்கு நிமிட காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பது எங்கள் நால்வரை தவிர யாருக்கும் தெரியாததால் படக்குழுவினருக்கு கூட இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தர்மதுரை படத்தில் பார்த்த அதே விஜய்சேதுபதி தான் மாமனிதன் படத்திலும்.. எந்தவித மாற்றமும் இல்லாத மனிதர்.. கதாபாத்திரங்களுக்காக மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய மனிதர்.

சங்கத்தமிழன் போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள்.. விஜய்சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது.. எல்லா வகையான படங்களும் செய்வதற்கு தகுதியான ஒரு நடிகர் தான் அவர்..

தர்மதுரை படம் போலவே இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பையும் ஆண்டிப்பட்டி பகுதிகளில்தான் நடத்தி இருக்கிறோம்.. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பை விட தற்போது விஜய்சேதுபதிக்கான மிகப்பெரிய வரவேற்பு இருந்ததை காண முடிந்தது..

அதுமட்டுமல்ல படப்பிடிப்பு முடிந்ததும் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதா என நாட்களே போனது தெரியாமல் ஒரு குடும்பமாக இருந்தது போன்ற உணர்வை தந்தது இந்த மாமனிதன் படப்பிடிப்பு.. இது தவிர கேரளா மற்றும் காசியிலும் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

இந்த படத்துக்காக முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சிறப்புமிக்க படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது.

வீர சிவாஜி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள ’தேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்.. இந்த படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது நானே விரும்பி இந்தப்படத்தில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவித்தேன்.. அவரோ நீங்கள் பணிபுரியும் அளவிற்கு இது பெரிய பட்ஜெட் படம் இல்லையே எனத் தயங்கினார்..

ஆனால் அவர் சொன்ன கதைதான் இந்த படத்திற்குள் வாண்டட் ஆக என்னை உள்ளே இழுத்தது.. காரணம் இதுவரை கிட்டத்தட்ட சொல்லப்படாத ஒரு புதிய கதை தான் இது.. அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் கதையும் தேனி மற்றும் அதன் அருகிலுள்ள மலைப்பகுதியில் நடக்கிறது என்பதால் மைனா படத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை மீண்டும் இந்த படத்தில் பெறுவதற்கு நான் விரும்பியதும் ஒரு காரணம்..

மைனா படத்தில் என்னால் செய்ய முடியாமல் போன சில விஷயங்களை இந்த படத்தில் செய்திருக்கிறேன்.. பொதுவாகவே எல்லோருக்குமே மலைப்பகுதி என்றாலே மிக பிடித்தமான ஒரு விஷயம் என்னுடைய படங்கள் பெரும்பாலும் அப்படி இயற்கை சார்ந்த கதைகளுடன் அமைவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..

வரும் சம்மரில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக இருக்கிறார்கள்.. அதனால் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களுக்கு அவ்வளவு குளுகுளு என இந்த படம் இருக்கும்.. மைனாவுக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்..

வர்மா படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது..

இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர் பாலா இயக்கினார்.. படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்த படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை.

ஆனால் தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவுஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது. படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாலாவைப் பொருத்தவரை இந்தப்படத்தை விக்ரமுக்காகத்தான் இயக்கினார்..

நடிகர் விக்ரமுடன் எனக்கு 19 வருட நட்பு இருக்கிறது.. அவர்தான் எனக்கு முதல்முதலாக ஸ்டில் போட்டோகிராபர் ஆக வாய்ப்பு கொடுத்தவர்.. அவரது மகன் துருவ்வுக்கும் முதன்முதலாக நான்தான் ஸ்டில்ஸ் டெஸ்ட் எடுத்தேன் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம். அவரது குடும்பத்தில் ஒரு நபர் போலத்தான் நான்..

விஜய்யின் தீவிர ரசிகர் தான் துருவ்.. அவரது படங்களை விரும்பி பார்ப்பவர்.. அதுமட்டுமல்ல இயல்பிலேயே அவருக்குள்ளும் நடிப்பு ஜீன் இருந்திருக்கிறது.. அத்துடன் அமெரிக்கா சென்ற நடிப்பு பயிற்சியும் பெற்றுவந்தார்..

நாங்கள் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது, அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் நடித்துக்காட்டி கைதட்டல்களை, பாராட்டுக்களை அள்ளிய வீடியோக்களை அவ்வப்போது தனது தந்தைக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்.. அதை எல்லாம் எங்களிடம் காட்டி ரொம்பவே பெருமைப்படுவார் விக்ரம்.

துருவ்விடம் உள்ள ஒரு சிறப்பம்சம், அவர் தமிழில் பேசினால் தமிழ் நடிகர் மாதிரி தெரிவார்.. ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்க நடிகர் போல அவரது முகமே மாறிவிடும்.. லோக்கலாக பேசினால் சென்னைப்பையன் போல, கொஞ்சம் மாடல் ஐடி வாலிபனாக பேசினால் அதேபோல என அவரது முகத்தோற்றம் விதம் விதமாக மாறுவது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்..

வர்மா படப்பிடிப்பின்போது எங்களுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் துருவ், அந்தப்படத்தின் டாக்டர் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசும்போது அவரது முகமே வேறுவிதமாக மாறுவதைக் கண்டு பாலாவே ஆச்சரியப்பட்டுப்போய், “இவன் அவங்க அப்பனையும் தாண்டிருவான்டா” என்று எங்களிடம் கூறியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது..

அதேபோல சில காட்சிகளில் பாலா மீண்டும் ஒன்மோர் கேட்பார்.. அப்போது துருவ்வின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார் என்று நான் கூறுவேன்.. அதற்கு பாலா, “ஆமாப்பா.. துருவ்கிட்ட அவங்க அப்பன் தெரியக்கூடாது.. அதனாலதான் ஒன்மோர் போலாம்னு சொன்னேன்” என்பார்.

வர்மா படத்திற்குள் வரும்போது துருவ் எப்படி இருந்தார், அந்தப்படம் முடியும்போது ஒரு முழுமையான நடிகராக எப்படி மாறி இருந்தார் என்பதையெல்லாம் கூடவே இருந்து பார்த்தவன் நான்.. இப்பொழுது வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பேசப்படுகிறது என்றால் பாலா என்கிற சிற்பியின் கைவண்ணம் தான் அதற்கு காரணம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..

அந்தப் படத்தை பற்றி விமர்சனம் செய்யும்போது புளூ சட்டை மாறன் கூட இது துருவ்விற்கு 101-வது படம் போல இருக்கிறது என்று சொன்னார்.. காரணம் பாலா படத்தில் நடித்து விட்டால் நூறு படங்களில் நடித்து அனுபவத்திற்கு சமம் என்பதைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டார்.

சூர்யா நடித்த நந்தா படத்தில் இருந்து இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளேன்.. அப்போது இருந்த பாலா வேறு.. இப்போது இருக்கும் பாலா வேறு.. அதனால் துருவ்விற்கு பாலா ரொம்ப கஷ்டம் கொடுக்கவில்லை.. துருவ்வே உரிமை எடுத்துக்கொண்டு மாமா இன்னொரு முறை ஒன்மோர் பண்ணிக்கிறேனே என்று கேட்டால்கூட, இதுக்கு மேல நீ ஒன்மோர் பண்ணினாலும் எனக்கு இதுவே போதும் என்பார்..

சிறுவயதிலிருந்தே தான் பார்த்த, தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் துருவ்விற்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த சுதந்திரம் கொடுத்து அவரை மிகச் சிறந்த நடிகனாக மாற்றினார் பாலா. துருவ்விற்கு இது மிகவும் கொடுப்பினையான விஷயம்..

இனி வருங்காலத்தில் பாலா-துருவ் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.. இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட வருத்தத்தால் விக்ரமுடனான பலவருட நட்பில் எந்த விரிசலும் விழவில்லை.. ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாக செய்யமுடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதை கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்..

இன்னும் சொல்லப்போனால் பாலா இயக்கிய சேது படம்தான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஆக மாறியது.. அதே சேதுவைத்தான் இங்கே பாலா மீண்டும் உருவாக்கினார்.. சேதுவில் தான் செய்ய நினைத்து முடியாமல் போன விஷயங்களை எல்லாம் இதில் அழகாகக் கொண்டுவந்திருந்தார்.. சொல்லப்போனால் சேது விக்ரமின் இன்னொரு அப்டேட் வெர்சன் தான் வர்மாவில் நடித்த துருவ்வின் கதாபாத்திரம்.. நிச்சயம் இந்தப்படம் வெளியாகி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றார் சுகுமார்..

விடைபெற்று கிளம்பும் முன்பு இறுதியாக அவரிடம் எப்பொழுது நீங்கள் டைரக்டராக மாறப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு, இப்போது மட்டுமல்ல எப்போதுமே எனக்கு டைரக்ஷன் ஆசை இல்லை” என அழுத்தம் திருத்தமாக கூறி விடைகொடுத்தார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

ஆதித்ய வர்மாவை விட வர்மா ஒருபடி மேல் தான்” ; ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒப்பீடு

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.