சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர்.

இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது

“இந்தப் பாடலைப் பார்த்த போது ஒரு நேர்நிலையான அதிர்வலைகள் பரவுவதை உணர முடிகிறது. கலை வடிவத்தின் நோக்கம் என்று கூறினால் அந்த வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது.சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக செய்துள்ளான். நான் இங்கே வந்திருப்பது இதற்கு இசையமைத்துள்ள ஜெய் கிருஷ் என்கிற நண்பனுக்காகத்தான். எனது நண்பர் ஒரு சிறிய பட்ஜெட் படம் எடுத்துவிட்டு அவருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையில் நிகழ்ந்த மனஸ்தாபத்தால் சில காட்சிகளுக்குப் பின்னணி இசை முடிக்க முடியாமல் நின்று இருந்தது. படத்தை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை. அப்படிப்பட்ட,இக்கட்டான நேரத்தில் ஜெய்கிருஷ் வந்து ஊதியம் பற்றிப் பேசாமல் எதுவுமே வாங்காமல் தனக்கு எந்தப் பெயரும் கிடைக்காது என்று தெரிந்தும் பின்னணி இசை அமைத்துக் கொடுத்து உதவினார்.அவர் திறமைக்கான உயரங்கள் காத்திருக்கின்றன. இன்னும் பெரிய மேடைகள் அவருக்கு அமையும். சிறுவன் யோகேஸ்வரன் மேலும் வளர்வான்.வாழ்த்துக்கள் ” என்று வாழ்த்தினார்.

பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பேசும்போது,

“நான் இந்த யோகேஸ்வரனை மட்டுமல்ல அவனுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அவனது பெற்றோரையும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

நல்லதொரு இசை முயற்சியாக இதைச் செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இசையில் எடுத்துக்கொண்ட கான்செப்ட் புரிகிறது. சிலநிமிடங்களில் ஒலிக்கும் இதற்காக பல மணி நேரம் அவர்கள் உழைத்திருப்பது தெரிகிறது.இந்தப் பாடலை பார்க்கும்போது நல்ல நம்பிக்கையை அளிக்கிறது. வாழ்க்கை விசித்திரமானது. பல ஏற்றங்களையும் தாழ்வுகளையும் கொடுக்கக்கூடியது. நமது தாழ்வான நேரங்களில் யாராவது நம்பிக்கை வார்த்தைகள் சொல்வதற்கு என்று வேண்டும். அப்படி ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இதை நான் பார்க்கிறேன்.

வளரும் திறமைசாலிகளுக்கு நல்ல வாழ்த்தும் ஆசிர்வாதமும் தேவை .நாங்கள் அதைக் கொடுப்பதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறோம். இதேபோல் பல பாடல்கள் உருவாக வேண்டும்.பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் பங்கு முக்கியம். என்னை அப்படித்தான் என் பெற்றோர்கள் வளர்த்தார்கள் ஊக்கம் தந்தார்கள். நான் கிரிக்கெட் வெறியன் அதேநேரத்தில் இசையையும் எடுத்துக்கொண்டேன்.அதற்கு ஊக்கம் தந்தது என் பெற்றோர்கள் தான். அப்படி யோகேஸ்வரனுக்கு பெற்றவர்கள் அமைந்திருப்பது மகிழ்ச்சி. அவர்களை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்” என்றார்.

சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.