ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ்  தயாரிப்பில் மாதவன் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா  கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’

சிறந்த விஞ்ஞானியாக தேசமே கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நம்பி நாராயணனை தேச துரோகியாக மாற்றி சிறையில் அடைத்த கொடுமைகளையும், அதன் விளைவாக, அவரும், அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டமும், அவர்கள் கடந்து வந்த அவமானங்கள் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க கொடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன், குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.  இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதை மறுத்து , இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக பணியாற்றுகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு போடப்படுகிறது. போலீஸ் நம்பி நாராயணனை கைது செய்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் வாழ்க்கை என்ன ஆனது என்பதே   ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’  படத்தின் மீதிக்கதை.

மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு தோற்றத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா சில நிமிடங்களே வந்தாலும் கவனத்தை ஈர்க்கிறார். ரவி ராகவேந்திரா , கார்த்திக் குமார் ,மிஷா கோஷல் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் இயல்பு !

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, கதைக்கு தேவையானதை மிக சரியான அளவில் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே-வின் கேமரா படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது.

நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு, சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சி அமைப்பு என அத்தனை விஷயங்களையும் இயக்குநராக மாதவன் திருப்திகரமாக கொடுத்திருக்கிறார்.

திறமையானவர்களை மதிக்காத எந்த ஒரு நாடும் வல்லரசு ஆக முடியாது”  ‘நான் நிரபராதி என்றால் உண்மையான குற்றவாளி யார்’ என இறுதியில் உண்மையான விஞ்ஞானி நம்பி நாராயணனே திரையில் தோன்றி மனமுடைந்து  பேசும்  வசனங்களால் தியேட்டரில் அதிரும் ரசிகர்களின் கைதட்டல்!  

விஞ்ஞானியின் கதையை மையமாக வைத்து கதையின் நாயகனாக நடிப்பதுடன் இயக்குனராக  எந்தவித சினிமா பார்முலா இல்லாமல் மிக அழுத்தமான கதை, திரைக்கதை அமைப்புடன் இப்படத்தை  இயக்கியுள்ள  மாதவனின் முயற்சிக்கு மிக பெரிய பாராட்டு !

மொத்தத்தில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ தேசிய விருது நிச்சயம்

நடிகர்கள்     : மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா  கார்த்திக் குமார், மோகன் ராமன்

இசை : சாம் சி.எஸ்

இயக்கம்  : மாதவன்

மக்கள் தொடபு : சுரேஷ்  சந்திரா

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.