தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடியும் வரை காத்திரு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி பேசிய ரவீந்திரன், ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக ‘விடியும் வரை காத்திரு’ இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார்.

“ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட், அவர்கள் வந்த கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு. இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர்
கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்,” என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

நடிகர்கள் தேர்வு பற்றி அவர் கூறுகையில், “சலீம் இந்த கதையை என்னிடம் கூறுகையில், இந்த நடிகர்கள் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது. விதார்த், விக்ராந்த் மற்றும் கார்த்திக் மூவருமே மிகவும் நேர்த்தியான கலைஞர்கள். சரியான கதையை தேர்வு செய்வதில் விதார்த் திறமைசாலி, விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன். இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் வருண்,” என்று தெரிவித்தார்.

படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவீந்திரன் மேலும் கூறினார்.

படத்தின் தலைப்பை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன், “பல வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விடியும் வரை காத்திரு’. இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்,” என்றார்.

“ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது. ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப் படவுள்ளன. முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த படத்திற்காக இயக்குநர் சலீம் பல விதமான புதிய யுக்திகளை கையாள உள்ளார் என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’

Leave a Reply

Your email address will not be published.