”நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும் ‘சீதா ராமம்’ படத்தின் கதை, இதற்கு முன் நான் கேட்டிராத கதை. அதுபோன்ற காதல் கதை நாம் இதுவரை பார்த்ததில்லை.” என ‘சீதா ராமம்’ படத்தின் நாயகனும், நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

ஸ்வப்னா சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தயாரித்து, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் திரைப்படம் ‘சீதா ராமம்’. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம், விஜயவாடா என பல நகரங்களுக்கு பட குழுவினர் சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இதன் போது நடிகர் துல்கர் சல்மான் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு…

உங்கள் முந்தைய படங்களை ஒப்பிடும்போது ‘சீதா ராமம்’ படத்தின் சிறப்பம்சம் என்ன?

‘சீதா ராமம்’ ஒரு அசலான கதை. உண்மை கதையில் இது போன்ற கிளாசிக்கலாக அமைவது அரிது. இப்படி ஒரு கதை உலகில் எங்கும் இதற்கு முன் வரவில்லை. திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். தற்போது வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் நீங்கள் பார்த்தது குறைவு தான். பெரிய திரையில் அதை நீங்கள் ரசித்து அனுபவிக்க வேண்டும்.

இனி காதல் கதையில் நடிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஏன்..?

நாளுக்கு நாள் எனக்கும் வயதாகிறது. வித்தியாசமான முதிர்ந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். புதிய கதாபாத்திரங்களிலும், நிஜமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காதல் கதைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

‘சீதா ராமம்’ படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அற்புதமான ஆல்பத்தை அளித்திருக்கிறார். படத்தின் இசை நன்றாக இருக்கும் என்று கதையை கேட்கும்போதே புரிந்து கொண்டேன். காஷ்மீரில் படப்பிடிப்பில் ‘காணுன்னா கல்யாணம்..’ என்ற பாடல் படமாக்கப்படும்போது இந்தப் பாடல் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்பது புரிந்தது. எல்லா பாடல்களுமே காட்சி வழியாக அற்புதமானவை தான். பின்னணி இசையும் அற்புதம். இந்த ஆல்பத்தில் ‘காணுன்னா கல்யாணம்..’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

திரைப்படங்களை இயக்கும் திட்டமிருக்கிறதா..?

தற்போது நேரமில்லை. ஆனால் எதிர்காலத்தில் படங்களை இயக்கும் எண்ணமிருக்கிறது. எனது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வந்தால், அது பார்வையாளர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.