பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது,
நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,
மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் அந்த மாநிலத்திற்கான பாரம்பரிய நடனங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.
நாளைக்கு படம் வெளியாகிறது. நேரம் நெருங்க நெருங்க பயமாக இருக்கிறது. ஆனால், படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த மணி சாருக்கு நன்றி என்றார்.
நடிகர் விக்ரம் பேசும்போது,
ஆங்கில படங்களில் பிரேவ் ஹார்ட் போன்ற பல படங்களில் பல கனவு பாத்திரங்கள் இருக்கின்றது. ஆனால், அதைவிட நமது நாட்டில் எண்ணற்ற வீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கனவு கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தையே மணி சார் எனக்கு கொடுத்ததில் மகிழ்ச்சி. கூடவே இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடிக்க வேண்டும் என்று சிறிது பயமும் இருந்தது. திரிஷாவை சாமி படத்தில் இருந்து விண்ணைத் தாண்டி வருவாயா என்று அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். அவருக்கு எல்லா இடங்களிலும் மிகுந்த வரவேற்பு கொடுத்தார்கள்.
பார்த்திபனை புதிய பாதை படத்திலிருந்து அனைத்து படங்களையும் சிறந்த படங்களாக கொடுத்து வருகிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி.
திருவிளையாடல் படத்திற்குப் பிறகு இந்த படத்திற்கு தான் 3 தலைமுறை மக்களும் இப்படத்தை காண ஆவலாக இருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு முதியோர்களும் திரையரங்கிற்கு வருவதால் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் வசதி செய்து தருமாறு திரையரங்க உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். எனது அம்மாவும் பார்க்க வருகிறார்கள்.
இப்படத்தில் காதல் தான் மையக்கருவாக இருக்கும். அதிலும், ஆதித்ய கரிகாலனுக்குள் எரிந்துகொண்டிருப்பதும் காதல் தான். இப்படம் சிறந்த காதல் காவியமாக இருக்கும்.
இதே செப்டம்பர் 30ஆம் தேதி தான் சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் வேதா வெளியானது. புஷ்கர் காயத்ரி பிற மொழிகளுக்கு கொண்டு சேர்த்தார்கள். இப்படமும் பிற மொழிகளுக்கு செல்வதில் மகிழ்ச்சி என்றார்.
நடிகை திரிஷா பேசும்போது,
இப்படம் சக்கரம் மாதிரி சென்னையில் ஆரம்பித்து, திரும்ப அங்கேயே முடிக்க வேண்டும் என்று மணி சார் கூறினார். எனக்கு எப்போதும் என்னுடைய படத்திற்கு முதல் பேசுவதில் பதட்டம் இருக்கும். ஆனால், இப்படத்திற்கு இந்தியா முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டது புதிய அனுபவமாக இருந்தது. எங்கு சென்றாலும் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.
இதற்கு முக்கிய காரணம் மணி சார் தான். அவரால் தான் எனக்கு இந்த வரவேற்பும், புகழும் கிடைத்திருக்கிறது என்றார்.
லைகா தமிழ்குமரன் பேசும்போது,
இப்படத்திற்கு டிக்கெட் பதிவை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பதிவு முடிந்துவிட்டது. இதற்கு முன் எந்த படத்திற்கு பார்த்ததில்லை. இணையதள சர்வரே முடங்கும் அளவிற்கு முன்பதிவு வேகமாக நடைபெற்றிருக்கிறது என்றார்.








Leave a Reply