ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்  தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’லவ் டுடே’

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் பிரதீப்பும் நாயகி இவானாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.இவர்களுடைய காதல் விவகாரம் இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வர, அவர் காதலுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் போடுகிறார். பிரதீப்பின் செல்போனை இவானாவிடமும், இவானாவின் செல்போனை பிரதீப்பிடமும் ஒரு நாள் முழுவதும் வைத்துகொள்ள உத்தரவிடுகிறார்  சத்யராஜ். காதலர்கள் இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கின்றனர்.

இதனையடுத்து ஒருவரை பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும் செல்போனில் உள்ள விஷயங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகின்றனர் அதுவே அவர்களது காலுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது . இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’லவ் டுடே’  படத்தின் மீதிக்கதை.

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக வெற்றி கண்ட பிரதீப் ‘லவ் டுடே’ படத்தில் இயக்குநராக மட்டுமில்லாது நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.  காதல், பாசம், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருந்தாலும், தனுஷ் சாயலை தன் நடிப்பில் கொண்டு வந்ததை தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் இவானா, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரெஸ்டோரண்ட் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சத்யாரஜ், தனது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம்  சேர்த்திருக்கிறார். மகள் இவனாவை காதலிக்கும் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு வரவழைக்கும் சத்யராஜ் அவரிடம் கேள்வி கேட்பதும் தனது பாணியில் நக்கலடிப்ப்தும் கலகலப்பு.  

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, செல்போனை பயன்படுத்தும் பிள்ளைகளை கண்டிக்கும் அம்மாவாக ராதிகா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இறுதி காட்சியில்  மகனிடம் அவர் பேசும்  வசனம் படத்துக்கு பலம்  சேர்க்கிறது.  யோகிபாபு மற்றும் ரவினா ரவியின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா  இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கின்றன. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

 இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களுடைய காதலையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், சோசியல் மீடியா மூலம் பெண்களுக்கு நடக்கும் தீமைகளையும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தீர்வையும் மிக இயல்பாகவும் அதே சமயம் மிக அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இந்த கால காதலர்கள் மட்டுமல்ல இளவட்டங்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ’லவ் டுடே

நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா ,

இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம்: பிரதீப் ரங்கநாதன்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.