ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் :மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ், அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’’கலகத் தலைவன்’ .
உதயநிதி ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வஜ்ரா எனும் கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனமொன்றை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கிறது வாகனம் அறிமுகமாகும் இறுதி நேரத்தில், அந்த வாகனத்தில் குறை ஒன்று இருப்பது தெரியவர, அதை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கனரக வாகனத்தில் இருந்த குறைபாடு ஊடகங்கள் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது இதனால் கோபடமடைந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கம்பெனியின் ரகசியம் எப்படி வெளியானது என்பதை அறிய முன்னாள் ராணுவ வீரர் ஆரவை நியமிக்கிறார். கொடூரமான முறையில் விசாரித்து ஒவ்வொருவரிடமும் இருந்து பல உண்மைகளை வாங்குகிறார் ஆரவ் இறுதியில் ஆரவ் ரகசியங்களை வெளியிட்டவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’கலகத் தலைவன்’ படத்தின் மீதிக்கதை.
திரு என்னும் கதாப்பாத்திரத்தில் பொருளாதார நிபுணராக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். கதை என்ன கேட்கிறதோ அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் உதயநிதி பல இடங்களில் கண்களினாலேயே நடித்திருக்கிறார். காதல் காட்சிகள், ஆக்ஷன் என தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவர் கதாபாத்திரத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகள், பாடல்கள் என தன்னால் முடிந்த அளவுக்கு படத்திற்கு வலு சேர்த்துள்ளார். உதயநிதி நண்பனாக நடித்திருக்கும் கலையரசன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி பல இடங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆரவ் ஒவ்வொருவரையும் தேடி தேடி கொடூரமாக வேட்டையாடுவதை பார்க்கும் போது படம் பார்ப்பவர்களுக்கே அவர் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. அங்கனா ராய், ஆர்ஜே விக்னேஷ், அனுபமா குமார் என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
அரோல் கொரொலியின் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதத்தில் உள்ளது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்.
இயக்குனர் மகிழ் திருமேனி கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு மறைமுகமாக மக்களை ஆள்கின்றன என்பதை துணிவுடனும், ரசிக்கும்படியாக கதையை சொல்லியிருக்கிறார். இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைக்களம் அருமையாக இருக்கிறது. அதிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, சிறு சிறு விஷயத்தைக் கூட அழகாக காட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல்களை வாங்கி தருகிறது..
நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், நிதி அகர் வால், கலையரசன், ஆரவ்,
இசை: ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கரோலி
இயக்கம்: மகிழ் திருமேனி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
Leave a Reply