B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட்) தயாரிப்பில் பி ஜி மோகன் – எல் ஆர் சுந்தரபாண்டி  இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “தீர்க்கதரிசி”

காவல்துறையின் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார் ஸ்ரீமன். அங்கு அடிக்கடி தேவையில்லாத போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும் நபர், இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் இறக்கப் போகிறார். அவரை ஒருவர் கொலை செய்யப்போகிறார் என்று கூறி போனை கட் செய்து விடுகிறார். ஆனால் காவல்துறையினர் இது வழக்கமான தவறான அழைப்பு  என அலட்சியப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் அந்த மர்ம நபர் கூறிய விஷயம் நடந்து  விட  இதனைத் தொடர்ந்து  உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அண்ணா சாலையில் ஒரு விபத்து நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிக்கிறார் அந்த நபர். அவர் சொன்னது போலவே அடுத்ததாக ஒரு விபத்து நிகழ்கிறது. இதனால் வழக்கு போலீஸ் உயரதிகாரியாக செயற்படும் அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவு விசாரணை செய்தும் மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அடுத்தடுத்து நிகழும் அந்த அசம்பாவிதங்களை அஜ்மல் குழுவினர் துப்பறிய முடியாமல் திணறுகின்றனர்.

அதே சமயம், காவல்துறைக்கு தகவல் அளிக்கும் அந்த நபர் ஊடகங்களுக்கும் அந்த தகவலை சொல்கிறார். இதனால், முகம் தெரியாத அவர் நடப்பதை முன் கூட்டியே அறியும் தீர்க்கதரிசியாக  மக்களிடம் பிரபலமாகி விடுகிறார். இறுதியில் அந்த நபர் யார்? அவர் எதற்காக இதை செய்கிறார் என்பதே “தீர்க்கதரிசி” படத்தின் மீதிக்கதை.

போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அஜ்மல்,  நடிப்பில் மிரட்டியிருக்கிறார் உண்மையில் இவர் நல்லவரா அல்லது கெட்டவரா என தெரியாத அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது வேலையை நேர்த்தியாக செய்து அனைவரின் கவனத்தையும் பெறுகின்றனர்.

தீர்க்கதரிசியாக நடித்திருக்கும் சத்யராஜ், படத்தின் இறுதியில் தோன்றி கைதட்டல் பெறுகிறார். அவருடைய அனுபவமான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கும், படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஸ்ரீமன் தேவதர்ஷினி இருவரும் கணவன் மனைவியாக தங்கள் பங்களிப்பை அழகாக வெளிப்படுத்திருக்கின்றனர் ஒய் ஜி மகேந்திரன் ஒரு மனோ தத்துவ மருத்துவராக சிறப்பாக செய்திருக்கிறார்

ஜி.பாலசுப்பிரமணியத்தின் இசையில் பாடல்கள்  கவனம் பெறுகிறது . பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணனின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது

நடிகர்கள் :  சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன்

இசை : ஜி.பாலசுப்பிரமணியம்

இயக்கம் : பி ஜி மோகன் – எல் ஆர் சுந்தரபாண்டி

மக்கள் தொடர்பு : சதீஷ்  – சிவா  (AIM)

Leave a Reply

Your email address will not be published.