லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத் கான், அப்துல் லீ, பேபி வ்ருத்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தீராக் காதல்’
நாயகன் ஜெய் தனது மனைவி ஷிவதா மற்றும் குழந்தை வ்ருத்தியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் வேலைக் காரணமாக பெங்களூருவுக்கு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷை ரயில் நிலையத்தில் ஜெய் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷும் பெங்களூருவுக்கு செல்வதால் இருவரும் ஒன்றாக பயணிக்கின்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இருவரும் தங்களுடைய செல்போன் எண்ணை பரிமாறிக் கொள்கின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் மிகவும் கோபக்காரர், மிகவும் துன்புறுத்துகிறார். இதனால் வாழ்கையே வெறுப்பில் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னாள் காதலன் ஜெய்யின் ஆறுதல் வார்த்தைகளும், பழைய நினைவுகளும் அவரை மீண்டும் காதலிக்க தொடங்க வைத்து விடுகிறது ஒரு கட்டத்தில் இருவரும் சென்னை திரும்பும் முன், இனி இருவரும் சந்திக்க வேண்டாம். அப்படி சந்தித்தால் இருவரின் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை வரும் என்று கூறி அங்கு பிரிகிறார்கள்.
சென்னைக்கு வரும் ஜெய், தனது மனைவி மகளோடு சந்தோஷமாக வாழ்கிறார்., அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கணவனுடன் சண்டை போட்டு பிரிந்து ஜெய்யின் வீட்டுக்கு எதிரிலேயே குடி வருகிறார். இறுதியில் ஜெய் யாருடன் ஒன்று சேர்ந்தார் என்பதே ’தீராக் காதல்’ படத்தின் மீதிக்கதை.
நடிகர் ஜெய் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் பாராட்டும் விதத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அனுபவமான நடிப்பு மூலம் தனது கதபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். குழந்தையிடம் கொஞ்சும் போதும், மனைவியிடம் மன்றாடும் போதும், காதலியை பார்த்து தவிக்கும் போதும் அந்த உணர்வுகளுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகி ஷிவதா தன் கணவனின் மீது அன்பு கொள்ளும் சராசரி மனைவியாகவும், எங்கே அவர் தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ என சந்தேகம் கொள்ளும் காட்சியிலும் கைதட்டலை பெறுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது கொடுமைக்கார கணவனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதும் ஜெய்யை மீண்டும் அடைய நினைப்பதும் என அவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,, பின்னணி இசை காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செயகிறது. ரவிவர்மன் நீலமேகமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கண்ணை உறுத்தாத ரம்மியமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.
பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும், ஒரு அழகான வாழ்க்கை பயணத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். ரோகின் வெங்கடேசன் கதை வேறு கோணத்தில் சென்று விடக்கூடாது என்பதை தெளிவாக மனதில் வைத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.
மொத்தத்தில் ’தீராக் காதல்’ குழந்தையின் சிரிப்பு போன்று அழகானது
நடிகர்கள் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத் கான், அப்துல் லீ, பேபி வ்ருத்தி
இசை : சித்து குமார்
இயக்கம் : ரோகின் வெங்கடேசன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply