வழக்கத்திற்கு மாறான கதைகள் மற்றும் காலத்தைத் தாண்டிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நடிப்பில் கலை தாகத்தைத்  தீர்த்துக் கொள்ள விரும்பும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே! திறமையான பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. பாலிவுட்டில் ‘ரங் தே பசந்தி’மூலம் அழியாத முத்திரையை பதித்தாலும், தெலுங்கில் ‘பொம்மரில்லு’ மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும் அல்லது தமிழ்த் துறையில் பல்வேறு வகைகளில் ஜொலித்தாலும், சித்தார்த் சினிமா மற்றும் நடிப்பு மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படமான ‘சித்தா’ரசிகர்களின் இதயங்களை வென்றது. இப்போது, நடிகர் சித்தார்த் அவரின் நாற்பதாவது படமான ‘சித்தார்த்40’ படத்தில் நம்பிக்கைக்குரிய குழுவுடன் கைகோர்த்துள்ளார்.’மாவீரன்’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த சாந்தி டாக்கீஸ்- அருண் விஸ்வா தயாரிப்பில், ‘8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீகணேஷ் படத்தை இயக்குகிறார்.

நடிகர் சித்தார்த் கூறும்போது, “உலகெங்கிலும் உள்ள சினிமா பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் வகையில் படங்களைக் கொடுக்கும் நம் திரைத்துறையின் இளம் நம்பிக்கையாளர்களுடன் சிறந்த படத்தில் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. சினிமா ஆர்வலர்களும், குடும்பத்தினரும் ‘சித்தா’ படத்தின் மீது நிறைய அன்பு கொடுத்தனர். பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை இந்தப் படம் கொடுத்தது. ’சித்தா’ படத்திற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்து விட்டது. ஒரு தயாரிப்பாளரின் மகிழ்ச்சி எப்போதும் பார்வையாளர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்குவதாகும். சுவாரஸ்யமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற அருண் விஸ்வாவின் தொலைநோக்கு பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை முதன்முறையாக சந்தித்தபோது அவர் ஒரு முதலீட்டாளர்-தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி நல்ல சினிமா மூலம் திரைத்துறையை உயர்த்த கனவு காணும் ஒரு தயாரிப்பாளர் என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. எங்கள் அர்ப்பணிப்பும் ஆர்வமும் பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

‘சித்தார்த் 40’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published.