‘லோக்கல் சரக்கு’ படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் ‘கடைசி தோட்டா’. அறிமுக இயக்குநர் ரவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கடைசி தோட்டா’ படத்தின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் டத்தோ ராதாரவி அவர்கள் திரையுலகில் தனது 50 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை கொண்டாடும் வகையில், நேற்று சென்னையில் அவருக்கு படக்குழுவினர் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார்கள். சென்னையில் உள்ள அம்பிகா எம்பயர் ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சுவாமிநாதன் ராஜேஷ், இயக்குநர் நவீன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு டத்தோ ராதாரவிக்கு ஆள் உயர மாலை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், “’கடைசி தோட்டா’ திரைப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது. ராதாரவி சாரின் 20 வது ஆண்டில் அவர் இப்படி படத்தில், கதாநாயகனாக நடித்திருப்பது எங்கள் படத்திற்கு பெருமை. படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிபோவதற்கு படத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் காரணம். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடித்தது முதல் இப்போதுவரை தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரைப் போல் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் படத்தை விளம்பர படுத்த முடியும். வனிதா மேடம் மிக நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. அவருக்கு வேறு ஏதோ வேலை இருக்கிறது, என்று சொல்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியாததால் தான், அடிக்கடி நிகழ்ச்சி நடத்த வேண்டி இருக்கிறது. ஆனால், கடைசி தோட்டா படம் தொடர்பாக நடக்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும், இதன் பிறகு படம் வெளியீட்டில் உங்களை சந்திப்போம்.” என்றார்.

நாயகன் ராதாரவியின் 50 வது வருடத்தை கொண்டாடிய ‘கடைசி தோட்டா’ படக்குழு!

Leave a Reply

Your email address will not be published.