ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’.இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின் 30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜீ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.
நாயகி ஆத்யா பிரசாத் பேசும்போது,
“இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராகவ் சொன்னபோது நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையுடன் பொருந்தி போனது. அதனாலேயே இந்த படத்தில் நடிக்க விரும்பினேன். அதற்கு ஏற்ற மாதிரி ஆடிசனிலும் தேர்வானேன். ராஜுவுடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. படத்தில் அவர் கதாபாத்திரம் என்னவோ அதேபோலத்தான் எப்போதுமே வாழ்ந்து கொண்டே இருந்தார். அவரது நிஜ கேரக்டரே அதுதானா என்று கூட தோன்றியது” என்று கூறினார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ராஜு பதிலளித்து பேசும்போது,
“’பன் பட்டர் ஜாம்’ என்றால் நான் ஒரு நினைப்பில் இருந்தேன்.. ஆனால் இந்த படத்தில் என்னை கதாநாயகியை தொடவே விடவில்லை. அவர் ஒரு பக்கம் தனியாக நடித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் பன் என்றால் அது இயக்குநர் தான். மீதி நாங்கள் எல்லோரும் பட்டர் ஜாம் என்று சொல்லலாம். பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததுமே ஹீரோ ஆகிவிடலாம் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்ததால் ரியாலிட்டி என்னவென்று எனக்கு தெரியும். எப்போதுமே கதை தான் ஹீரோ. கதை சரியாக இருந்தால் மட்டும்தான் ஒரு நல்ல நடிகன் உருவாக முடியும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பாக எஸ்.ஜே சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதில் நீயே நடி என்று கூறி எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதை எழுதுவதற்காக மற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி சென்றதால் நாட்கள் போனதே தெரியவில்லை. அதிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதன் கடைசி பகுதியை எழுதும்போது, நமக்கு யாராவது கேக் போல ஒரு கதையுடன் வந்தால் அழகாக நடித்துவிட்டு போகலாமே என்று நினைத்த சமயத்தில் தான் இந்த படம் என்னை தேடி வந்தது.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் ராகவ் பதிலளித்து பேசும்போது,
“வாழ்க்கையில் பல பேர் கடந்த காலத்தை சுமந்து கொண்டே நிகழ்காலத்தை வாழ தவறி விடுகின்றனர். அப்படி எல்லாம் இல்லாமல் அந்த கணத்தை அப்போதே வாழ்ந்து விடுவது நல்லது என்பதைத்தான் இந்த பன் பட்டர் ஜாம் சொல்கிறது. அதைத்தான் இந்த போஸ்டர் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த படத்தின் திரைக்கதையில் ஒரு உணவுப்பொருள் தேவைப்பட்டது. எல்லோருக்குமே தங்களது குழந்தை பருவத்தில் ஒரு உணவு நினைவில் இருக்கும். நீண்ட நாள் கழித்து அதை பார்க்கும்போது உங்களது பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து விடும். இந்த படத்தில் அப்படி படத்தில் கருத்தை உருவகமாக சொல்வதற்கு எளிமையான வழியில் தேவைப்பட்ட உணவுப் பொருளாக பன் பட்டர் ஜாமை தேர்வு செய்தோம். படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கதைக்கான ஒரு வரி கருவுடன் என்னிடம் வந்தார். அவர் சொன்ன அந்த கருவில் ஒரு ஸ்பார்க் இருந்தது. அதை ஒரு முழு ஸ்கிரிப்ட் ஆக மாற்றும் அளவிற்கு அதில் விஷயம் இருந்தது. அப்படித்தான் இந்த கதை உருவானது” என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்கம் ; ராகவ் மிர்தாத்
இசை ; நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு ; பாபு
படத்தொகுப்பு ; ஜான் ஆபிரகாம்
ஆக்சன் ; ஓம் பிரகாஷ்
கலை இயக்குனர் ; சசி
நடனம் ; பாபி
மக்கள் தொடர்பு ; ஜான்சன்
Leave a Reply