ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி. தற்போது ‘நாற்கரப் போர் படம் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது நாற்கரப்போர்.

இந்தப்படத்தில் இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

“சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளை சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது இந்தப்படத்தின் கரு.

தனது முதல் படத்திலேயே விளையாட்டை மையப்படுத்தி கதையை உருவாக்கும் எண்ணம் தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவத்தின் மூலமாகவே தோன்றியது என இந்தப்படத்தின் கதை உருவான விஷயங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் ஸ்ரீ வெற்றி.

“சிறுவயதிலேயே எனக்கும் என் நண்பனுக்கும் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் எழுந்தது. என் நண்பன் படிப்பை விட செஸ் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தினான். எப்படியோ சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு செஸ் போர்டு வாங்கி தொடர்ந்து அதில் விளையாடி பயிற்சி பெற்றோம். வீட்டிற்கு தெரியாமலேயே எங்கள் ஊரான திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்று பயிற்சி மையத்தில் சேர முயற்சித்தோம். ஆனால் அங்கே பயிற்சி கட்டணம் அதிகம் என்று கூறி எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அன்று வீடு திரும்பியபோது இந்த உண்மையை கண்டுபிடித்து விட்ட எங்களது பெற்றோர் எங்களை அடித்து உதைத்து அந்த செஸ் போர்டையும் தீயிலிட்டு கொளுத்தி விட்டனர்.

ஆனால் என் நண்பன் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் விளையாட்டையும் விளையாட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஒரு கட்டத்தில் லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். அந்தப் பாதிப்பில் இருந்து நான் மீண்டு வரவே பல நாட்கள் ஆனது. அதேபோல எங்கள் தெருவில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஒரு அம்மா எங்கள் வீட்டில் மட்டும் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட அவரது இறுதிச் சடங்கை செய்த சில பேரில் நானும் ஒருவன். அவரது மரணமும் என்னை பாதித்தது. அதன் பிறகு சினிமாவுக்கான கதையை நான் உருவாக்கிய போது என் நண்பனின் விளையாட்டையும் தூய்மை பணி செய்த அந்த அன்னையின் கஷ்டங்களையும் ஒன்றாக்கி இந்த நாற்கர போர் கதையை எழுதினேன

நாற்கரப்போர்’ படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வித்தியாமான இரு பின்னணிக் கதைகளை பிணைத்து வரும் நாற்கரப்போர்

Leave a Reply

Your email address will not be published.