சென்னை, ஜூலை – 24 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் வைத்து நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் மாயா (G.R.மகாதேவன்) அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் K. கம்மாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. பிரகாஷ் அவர்களின் பெண் கல்வி குறித்த அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி கிளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர் அவர்களின் அர்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும் கெளரவிக்கப்பட்டனர்.
Leave a Reply