சென்னை, ஆக்ஸ்போர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் ஆங்கில மொழி தேர்வுகளை நடத்தும் ஆக்ஸ்போர்டு ஆங்கில மொழி நிலை தேர்வு மையம், உலகம் முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் புகழ்பெற்ற மேலும் 14 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி சேவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

புதிதாக இணைந்துள்ள பல்கலைக்கழகங்களில் ரஸ்சல் குழுமத்தின் புகழ்பெற்ற உறுப்பு பல்கலைக்கழகமான இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி பெல்பாஸ்ட், மற்றும் கனடாவில் உள்ள குவெல்ப் பல்கலைக்கழகம், இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் ஆப் இங்கிலாந்து யுனிவர்சிட்டி, நியூயார்க்கில் உள்ள கிளார்க்சன் யுனிவர்சிட்டி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் யுனிவர்சிட்டி போன்றவையும் அடங்கும்.

இது குறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில மொழி நிலை தேர்வு மையத்தின் தெற்காசியாவிற்கான மண்டல இயக்குனர் ரத்னேஷ் மிஸ்ரா கூறுகையில், குயின்ஸ் யுனிவர்சிட்டி பெல்பாஸ்ட் மற்றும் கிளார்க்சன் யுனிவர்சிட்டி போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கூட்டாண்மை மூலம் எங்கள் உலகளாவிய கல்வி சேவையை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் புதுமையான ஆக்ஸ்போர்டு இஎல்எல்டி டிஜிட்டல் மற்றும் ஆக்ஸ்போர்டு இஎல்எல்டி குளோபல் தளத்துடன் மாணவர்களின் கல்விப் பாதைகளில் மொழி மதிப்பீட்டை தடையின்றி ஒருங்கிணைப்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும். உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் பல்வேறு பின்னணி கொண்ட மாணவர்களுக்கு உதவுவதும் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதையுமே நாங்கள் எங்களின் முக்கிய கடமையாக கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு ஆங்கில மொழி நிலை தேர்வு மையம் அதன் முழு ஆன்லைன் ஆக்ஸ்போர்டு இஎல்எல்டி டிஜிட்டல் மற்றும் சோதனை மைய அடிப்படையிலான ஆக்ஸ்போர்டு இஎல்எல்டி குளோபல் மூலம் டிஜிட்டல் துறையில் மொழி சோதனையை ஒருங்கிணைக்கிறது.

இந்த பாதுகாப்பான இணையதளம் உயர் கல்வியில் முன்னேறுவதற்கு முக்கியமான வாசிப்பு, கேட்டல், எழுதுதல் மற்றும் பேசும் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கிறது. மனித மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவ பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் இதில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 48 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் தாங்கள் விரும்பும் பல்கலைக்கழங்களில் தங்களின் உயர்கல்வியை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.