Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் பேசியதாவது…
எங்களை வாழ்த்த பல வேலைகளுக்கு மத்தியில் இங்கு வந்திருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கும், இயக்குநர் வினோத் முதலான பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் சரவணனை எப்போது பார்க்கும்போதும் என் படத்தின் ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வரும், ‘உங்க நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, ‘ என்கிற வசனம் தான் அது. உண்மையிலேயே சரவணன் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டுவிட்டு, சென்று நிற்பவர் தான் சரவணன், இப்போது அவர் பின்னால் நிற்பவர்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இயக்குநர் பின்னால் எப்போதும் துணையாக நிற்பது அவர் மனைவி கலா அக்கா தான், அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு வந்து, இந்த படத்திற்காக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட, அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம். அதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும், நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பின்னால் விருதுகளே கிடைக்கும்.
இந்த படத்தை முதலில் நான் தயாரிப்பதாக தான் இருந்தது, அப்போது நான் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன் ஆனால் இறுதியில் நான் நாயகனாக மாறிவிட்டேன். முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது, பின்னால் அவர் படும் கஷ்டத்தை பார்த்து, நானே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.
உங்களை வேறு மாதிரி பார்க்கிறேன், எப்படி இந்த கேரக்டரில் கஷ்டப்படுத்துவது என தயங்கினர், ஆனால் நான் அவரை சமாளித்து, நடித்திருக்கிறேன். எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள், இந்த திரைப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற போது, நான் யோசித்தது ரவி சாரை தான், அவர் மிக கறாராக இருக்க கூடியவர். ஆனால் அவரே படத்தை துளி துளியாக ரசித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி கண்டிப்பாக மக்கள் எல்லோரும் ரசிப்பார்கள். அனைவருக்கும் நன்றி.
Leave a Reply