ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’. இதில் கல்லூரி வினோத் கதையின் நாயகனக நடிக்க, பிரியா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் டார்லிங் மதன், பி.எல்.தேனப்பன், வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோ சங்கர், விஜய் சத்யா, வீரா, சுப்பிரமணி, ஜீவன் பிரபாகர், செல்வா, வினோத் பிரான்சிஸ், மூர்த்தி, சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆலன் விஜய் இசையமைத்திருக்கிறார். கே.கே.விக்னேஷ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக வி.கே.நட்ராஜ் பணியாற்றியுள்ளார்.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக பத்திரிகையாளரும், யுடியுப் பிரபலமுமான பயில்வான் ரங்கநாதன், ”பல நல்ல விசயங்களோடு உருவாகியிருக்கும் ‘அப்பு’ திரைப்படம் மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” படம் என்று பாராட்டினார்.

தொடர்ந்து படம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “’அப்பு’ திரைப்படத்தை பார்த்தேன், சிறப்பான முயற்சி. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த கல்லூரி வினோத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். துணை நடிகராக வந்த நடிகர் ரஜினிகாந்த், எப்படி வில்லன் பிறகு ஹீரோ என்று வளர்ச்சியடைந்தாரோ அதுபோல் வினோத்தும் ஹீரோவாக வெற்றி பெறுவார், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் அவர் தன்னை நிரூபிப்பார் என்பது இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. கதாநாயகி பிரியா பார்ப்பதற்கு சினேகா போல் இருக்கிறார், அவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அப்பு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத்தக்கது. அவரது சோகத்தை பார்க்கும் போது படம் பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் வசீகரன் பாலாஜி, தனது முதல் படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்ற முயற்சியோடு இயக்கியிருக்கிறார். போலீஸ் என்கவுண்டர்கள் எப்படி உருவாகிறது என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருப்பவர், பிறக்கும் போது அனைவரும் நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள், ஆனால் சூழல் அவர்களை எப்படி குற்றவாளிகளாக்குகிறது, என்பதையும் படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மேலும், படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட கூடாது, என்பதையும் அப்பு கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த படத்தை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தை பிரைடே பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.