கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியாகும் “கைதி” திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சினிமா உலகத்தையே கலக்கியது. இந்த நிலையில் இன்று அனைவரையும் பேரானந்தத்தில் ஆழ்த்திய “கைதி” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள விமரிசையாக நடைபெற்றது

வசனகர்த்தா பொன்பார்த்திபன் பேசியது…

இந்தப்படத்தில நான் இருக்க காரணம் கார்த்தி சார் தான். “காற்றின் மொழி” பார்த்துட்டு லோகேஷ் கனகராஜிடம் அவர் தான் சிபாரிசு செய்தார். அவருக்கு நன்றி. லோகேஷ் கனகராஜிடம் வேலை பார்த்தது கரும்பு தின்ன கூலி வாங்கியது போல தான். முழுக்க இரவிலேயே நடக்கும் கதை ஒரு ஃபிரேம் கூட பகலில் கிடையாது. ரசிகர்களுக்கு பயங்கர தீனி காத்திருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்றார்.

எடிட்டர் பிலோமின் ராஜ் பேசியது..

லோகேஷ் கதை சொன்னபோது எப்படிடா எடுப்ப எனக்கேட்டேன். ஆனால் எடுத்து விட்டார். படம் பார்த்து முடித்தவுடன் சில காட்சிகள் அழுகை வந்துவிட்டது. இது ஆக்‌ஷன் படம் தான் ஆனால் செண்டிமெண்ட்டும் இருக்கிறது. கார்த்தி சாரிடம் அதைத்தான் சொன்னேன். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சாம் CS பேசியது…

“மாநாகரம்” முடித்த பின் ஒரு குறும்படம் செய்யலாம் என என்னிடம் வந்தார் லோகேஷ். ஒரு படம் செய்துவிட்டு ஏன் குறும்படம் செய்ய வேண்டும் என அவர் யோசிக்கவில்லை. அவருக்கு கதை, கண்டண்ட் தான் முக்கியம். “கைதி” பொறுத்தவரை இரவிலேயே நடக்கக்கூடிய கதை ஹிரோயின் கிடையாது இது எப்படி தமிழ் சினிமாவில் எடுக்க முடியும் என நினைத்தேன். ஆனால் கார்த்தி சார் ஒத்துக்கொண்டு நடித்தார். லோகேஷ் தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடிய இயக்குநர். கார்த்தி சார் இதில் நிறைய கஷ்டப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். டிரெய்லரில் பார்க்காத நிறைய ஆக்‌ஷன் படத்தில் இருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் பணத்திற்காக வேலை செய்யவில்லை எல்லோரும் தங்கள் படமாக நினைத்து உழைத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வருகிறது. இது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் பேசியது….

இந்தக்கதையில் கார்த்தி சார் வந்ததும் இந்தப்படம் மாஸாக மாறிவிட்டது. கார்த்தி சார் இதில் பயங்கர கஷ்டப்பட்டிருக்கிறார். தீரன் படத்தைவிட மிரட்டும் ஆக்‌ஷன் இந்தப்படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் மரியம் ஜார்ஜ் பேசியது ….

“கைதி” படம் இதுவரைக்கும் சிரிப்பு போலீஸா நடிச்சுருக்கேன் இந்தப்படத்தில என்னை சீரியஸ் போலீஸா நடிக்க வச்சிருக்கார் லோகேஷ் சார். கூத்துப்பட்டறையில இருந்து சினிமாவுக்கு வந்தேன். சின்ன சின்ன கேரக்டர்கள்ல நடிச்ச என்ன இந்தப்படத்தில பெரிய ரோல்ல சீரியஸ் கதாப்பாத்திரத்துல நடிக்க வச்சதுக்கு நன்றி. இந்தப்படத்தில எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன் என்றார்.

நடிகர் ரமணா பேசியது…

இந்தப்படத்தில என்ன நடிக்க கூப்பிட்டதுக்காக நான் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த டீம் கூட வேலை செஞ்சது மறக்க முடியாத விசயம். ஒரு நடிகனா எனக்கு நிறைய புதுசா கத்துக்கிட்டது இந்தப்படத்தில் நடந்தது. கார்த்தி மூணு நிமிசம் தொடர்ச்சியான குளோசப் காட்சில நடிச்சிருக்கார். அதைப்பார்த்து பிரமிச்சுப்போயிட்டேன். இனிமே எல்லாரும் அந்தக்காட்சிய வீட்ல நடிச்சு பார்ப்பாங்க. இந்தப்படம் தமிழ் சினிமாவில முக்கியமான படமா இருக்கும். எல்லோருக்கும் நன்றி என்றார்.

நடிகர் நரேன் பேசியது…

இந்தப்படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் இந்தப்படம் மூலமா ஆரம்பிக்கும்னு நான் நம்புறேன். லோகேஷோட டீம் பிரமிப்பு தர்ற டீம். ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பாங்க. கமர்ஷியலா நல்ல படம் கொடுக்ககூடிய முக்கியமான இயக்குநர். சினிமால எனக்கு நெருக்கமான நண்பர் கார்த்தி. நண்பன் கூட படம் நடிச்சது சந்தோஷம். ஒரு ஸ்டாராகவும் நடிகராகவும் தன்னை சரியா வடிவமைச்சிக்கிறார். இந்தப்படத்தில இருக்கிற ஆக்‌ஷன், செண்டிமெண்ட் இரண்டும் உங்களை கவரும் பாருங்க. நன்றி என்றார்.

விவேகானந்தா பிக்சர்ஸ் திருப்பூர் விவேக் பேசியது…

ரொம்ப நாள் கழிச்சு நாங்க இந்தப்படம் பண்றோம். கார்த்தி தான் இதுக்கு முழுக்காரணம். இந்தப்படத்தில எல்லோருமே பயங்கரமா உழைச்சிருக்காங்க. படம் பாருங்க, ஆதரவு தாங்க நன்றி என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது…

இது எனக்கு இரண்டாவது படம். இந்தப்படம் நடக்க முழுக்காரணம் S R பிரபு தான். நாயகி இல்லாம, கமர்ஷியல் விசயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்கனு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். கார்த்தி சார் கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டாரு. இப்படிப்பட்ட படம் உருவாக அவர் தான் காரணம். அவர் இல்லைனா இந்தப்படம் இப்படி ஒரு ஆக்‌ஷன் படமா வந்திருக்காது. இந்தப்படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமா உழைச்சிருக்காங்க. அவங்கள இந்த மேடையில் உங்க முன்னாடி அறிமுகப்படுத்துறேன். இது அவங்களுக்கு கொடுக்குற கௌரவமா நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும் என்றார்.

தயாரிப்பாளர் S R பிரபு பேசியது…

இயக்குநர் லோகேஷ் காமெடிய கூட சீரியஸா சொல்றவர். மிகத் தெளிவான ஒருத்தர். அவர் கூட வேறொரு புராஜக்ட் பண்ண வேண்டியது. அதற்கு லேட்டானது. அந்த நேரத்தில் ஒரு சின்னப்படம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்ப வந்த ஐடியாதான் இது. கேட்கும்போதே நல்லாருந்தது. ஹாலிவுட்ல இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு தமிழுக்கு இது புதுசா இருக்கும்.

கார்த்தி சார் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் இந்தப்படம் பெரிசா மாறிடுச்சு. ஒரு இரவுல நடக்கற கதை. முழுக்க ஆக்‌ஷன் தான். இந்தப்படத்தில வேலை பார்த்த மொத்த டீமுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். தீபாவளிக்கு வருகிறது. டீஸருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதே மாதிரி படமும் உங்களை திருப்திபடுத்தும் நன்றி என்றார்.

கார்த்தி பேசியது…

உதவி இயக்குநராக இருக்கும்போது நாம சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். மெட்ராஸ், தீரன் அந்த மாதிரி தான் “கைதி”. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டர தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது அத ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ஆடியன்ஸ்க்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்ச டைரக்டர். இதில எந்தளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. முழுக்க முழுக்க நைட்ல ஷீட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்‌ஷன் பண்ணிருக்கேன். இந்தப்படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம். எப்போதும் வாழக்கையில எத வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்தப்படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமா இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு. படம் முழுக்க ஆக்‌ஷன் தான். ஸ்டண்ட் மாஸ்டர். அன்பறிவ் வீட்டுக்கே போகல. எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷடம்னு அப்பத்தான் தெரிஞ்சது. எனக்கு ஆக்‌ஷன் படம்னாலே ரொம்பவும் பிடிக்கும் இந்தப்படம் முழுக்கவே ஆக்‌ஷனா அமைஞ்சிருக்கு. இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published.