Actor Srikanth Sowcarpet Movie Special Interview

பேயைத்தேடி ஒரு பயணம்!  நடிகர் ஸ்ரீகாந்தின்  நிஜமான பயங்கர அனுபவம்!
அண்மையில் வெளியாகி
இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர்,  நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.

அழகு

​ பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்?

ஒரு வித்தியாசம் வேண்டும்  என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம் என்றாலும் முழுமையான கமர்ஷியல் படம். ஒரு வணிகரீதியிலான படத்துக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இதில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட்ஸ் எல்லாமும் இதில் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும்படி ‘சவுகார்பேட்டை’ படம் இருக்கும்.

சுடுகாடு, மயானம் என்று படப்பிடிப்பு நடந்ததாமே..?

ஆமாம்.. வடசென்னைப் பகுதியிலும் அசோக் நகர் பகுதி சுடுகாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக அந்த இடங்களில் நடந்தது. இது எங்களுக்கு சங்கடமான, அசௌகர்யமான உணர்வைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நாங்கள் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டிருக்கும் இன்னொரு பக்கம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் . இப்படி இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
பேய்க்கதை என்றால் பெரும்பாலும் இரவில் இருட்டில்தான் நடக்கும். இதில் கதை,பகலில் திறந்த வெளியில்தான் நடக்கும். அப்படிக் கதை காட்சி அமைத்து பயமுறுத்துவது சிரமமானது மட்டுமல்ல சவாலும்கூட.ஆனால் இயக்குநர் வடிவுடையான் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் .

உங்கள் பாத்திரம் எப்படி?

முதன் முதலில் இதில் நான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். சென்னைவாழ் இளைஞனாகவும் பேய் விரட்டும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்கள்.

சில நேரம் இரு வேடங்களிலும்  ஒரே நாளில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த மந்திரவாதி மேக்கப் போட குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அதைக் கலைக்கவும் ஒரு மணி நேரம் ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தோற்றத்திலும் நடிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் இருவேடங்கள் ஏற்பதிலுள்ள சிரமம் புரிந்தது. எல்லாவற்றையும் அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.ஆர்வமாக நடித்தேன்.

உடன் நடித்தவர்கள் பற்றி..?

எனக்கு ஜோடி லட்சுமிராய். அவர் இதற்கு முன் இப்படிப்பட்ட பேய்ப்படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர். படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் நடித்தார். அவருக்கு அப்போது அடி கூட பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல்  வலியைத் தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். நிஜமாகவே லட்சுமிராய் அர்ப்பணிப்புள்ள நடிகைதான். படப்பிடிப்பில் அவர் பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குநர்களை அடிக்கடி பயமுறுத்துவார் மாற்றிமாற்றி பேய்க்கதை சொல்லி அவர்களைப் பயமுறுத்துவார்

படத்தில் ‘பருத்திவீரன்’ சரவணன் நடித்துள்ளார். ‘பருத்திவீரன்’ படத்துக்கு முழுக்க  முழுக்கத் தலைகீழான வேடம்.. சிரிக்க வைக்கும் பாத்திரம், நடிப்பு  என  அவருடைய வேடம் ரசிக்க வைக்கும்.தலைவாசல் விஜய்,சிங்கம்புலி, பவர்ஸ்டார், கஞ்சாகருப்பு, மனோபாலா  என்று பெரிய அனுபவசாலிகள் கூட்டமே இருக்கிறது. ரேகா, வடிவுக்கரசி ஒரு பக்கம் நடிப்பில் கவர்வார்கள்.

அது என்ன ‘சவுகார் பேட்டை’ தலைப்பு  ?

சென்னையில் ஒவ்வொரு பகுதி பற்றியும் ஒரு பேச்சு இருக்கும். ‘சவுகார் பேட்டை’ என்றால் நிறைய சினிமா பைனான்சியர்கள் உள்ள பகுதி. அவர்களை மனதில் வைத்து தலைப்பு வைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் கூட எழுப்பப்பட்டது..இயக்குநர் வடிவுடையன் அதெல்லாம் ஒன்றுமில்லை எளிமையான பெயருக்காக வே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று தெளிவு படுத்தி விட்டார். இது ஒரு கமர்ஷியல் மசாலா படம், ஜனரஞ்சகமான படம் என்று கூறிவிட்டார் இயக்குநர்.  அவர் திட்டமிட்டு எதையும் செய்பவர். எனவேதான் 45 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது. சீனிவாச ரெட்டிதான் ஒளிப்பதிவாளர் .படு வேகமான வேலைக்காரர் அவர் .படத்தை விரைவில் முடிக்க . பக்கபலமாக இருந்தார்  ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார். வரிகளில் இசையில் தெறிக்கின்ற வகையில்  பாடல்கள் உள்ளன. பின்னணி இசையையும் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.

வழக்கமாக என் படங்கள் தமிழில் வெளியான பிறகுதான் தெலுங்கில் ‘டப்’ செய்யப் பட்டு வெளியாகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது. ‘நண்பன்’ படத்துக்குப் பிறகு என்படம் தமிழிலும் தெலுங்கிலும்  இப்படி வெளியாவதில் மகிழ்ச்சி.

உண்மையில் உங்களுக்குப் பேய் பயம் உண்டா?

பேய் பயம் யாருக்குத்தான் இருக்காது?. இருந்திருக்காது? எனக்கு சின்ன வயதிலிருந்து இருட்டு, பேய் என்றால் பயம்தான் இரவில் தனிமையான சூழல் என்றால் யாரோ இருப்பது போலப் பயப்படுவேன். இந்தப் பயம் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந்தது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள வேண்டும் தைரியமான ஆளாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். பயங்கரமான ஹாரர் மூவீஸ் பார்க்க ஆரம்பித்தேன். சரமாரியாக பேய்ப் படங்கள் பார்க்கத் தொடங்கினேன். அப்போதும் திகிலுடன்தான் பார்த்தேன். என்னைப் பெரிதாக  பயமுறுத்திய படம் ‘ஓமன்’தான்.
ப்ளஸ்டூ முடித்து கல்லூரி போகும் வரை இது தொடர்ந்தது. என்னதான் தைரியமாகக் காட்டிக் கொண்டாலும் மனதின் எங்கோ ஒரு மூலையில் இப்போதும் பேய் பயம் இருக்கத்தான் செய்கிறது.

உலகம் முழுக்க இந்த பேய் பயமும் நம்பிக்கையும் இருக்கிறது. பேய் உண்டா இல்லையா பார்த்து விடுவது என்று ஆசை வந்தது. ஸ்காட்லாந்து நாடு போன போது அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘பேயைத்தேடி ஒரு பயணம்’. என்கிற பெயரில் ஒரு ‘பயங்கர’ ட்ரிப் உண்டு . அதில் கலந்து கொண்டு  நான் பேயைத் தேடிப் போனேன். பூமிக்கு அடியில் சுமார் நாலைந்து மாடி அளவில் ஆழத்தில் சுரங்கப் பாதை இருக்கும். சிறு டார்ச் அடித்துக் கொண்டுதான் போக வேண்டும். சிலர் அங்கு பேயைப் பார்த்ததாகச் சொன்னார்கள் ஆனால் என் கண்ணில் பயம் தெரிந்ததே தவிர பேய் தென்படவில்லை. அப்பப்பா..என்ன ஒரு பயங்கரமான பயணம் அது.

எப்படி யென்றாலும் பேய்  உண்டா இல்லையா? என்கிற ஒரு கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் நல்ல சக்தி உண்டு என்றால் தீயசக்தியும் இருக்கத்தான் செய்யும் என்றும் தீயசக்தி வெற்றி பெறாது என்றும் மனம் சமாதானம் அடைந்தது.

 உங்கள் அடுத்த படம் ‘நம்பியார்’ தாமதமாகிறதே ஏன்?

அது என் சொந்தப்படம். இதுவரை சொல்லப் படாத கதை .ஒருவரிடம் உள்ள நல்ல கெட்ட குணங்களே நம்பியார் எம்.ஜி.ஆர் குணங்களாக காட்டப்பட்டுள்ளன. எல்லாருக்குள்ளும் இருக்கும் ‘நம்பியார்’பற்றிச்சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்.ஜி.ஆர் ஆகலாம்.  நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்த்து.எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published.