சமுத்திரக்கனி நடிப்பில் 2012ல் வெளிவந்த படம் சாட்டை. பள்ளி ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என காட்டி நல்ல வரவேற்பையும் பெற்ற படம் அது. அதன் இரண்டாம் பாகம் ‘அடுத்த சாட்டை’ இன்று திரைக்கு வந்துள்ளது.

அப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் கடமைக்கு பணியாற்றுவதோடு, ஜாதி வெறிப் பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களை தவிற மற்றவர்கள் மாணவர்களிடம் கடுமையாகவும் சாதிய பாகுபாட்டோடும் நடந்துக்கொள்கிறார்கள். சாதிய மனநிலை, ஆசிரியர்களிடம் மட்டும் அல்ல அந்த கல்லூரி மாணவர்களிடமும் மோலோங்கி இருக்கிறது.

கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், தமிழ் பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.

சமுத்திரக்கனியின் நடவடிக்கை பிடிக்காமல் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் கல்லூரி தலைமை ஆசிரியரான தம்பி ராமையாவின் தொடர் பிரச்சினைகள் ஒரு பக்கம், ஜாதி பிரிவினையோடு இருக்கு மாணவர்களை சரிப்படுத்தும் பணி மறுபக்கம், என்று இருக்கும் சமுத்திரக்கனிக்கு, அக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுபவருடன் காதல் ஏற்பட, இந்த மூன்றிலும் அவர் எப்படி வெற்றிப் பெற்றார், மாணவர்களையும், பேராசிரியர்களையும் எப்படி திருத்துகிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்‌ஷனிலும் கலக்கி இருக்கிறார். மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கல்லூரியின் தலைமை ஆசிரியராக, வில்லத்தனம் கலந்த நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் வில்லத்தனத்தில் இருக்கும் மிரட்டலும், காமெடிக் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

கல்லூரி படித்தாலும், உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய தெரியாத மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அவர்களுக்கு புத்தகப் படிப்பு மட்டும் போதாது, செயல்முறை படிப்பும் தேவை என்பதை படம் வலியுறுத்துகிறது.

இயக்குநர் அன்பழகன் சாட்டை படத்தில் தன் கருத்துகளை பள்ளியில் இருந்து தற்போது கல்லூரிக்கு கடத்தி இருக்கிறார். சமூகத்தில் புறையோடி கிடக்கும் சாதி ஏற்றதாழ்வுகளை மாணவர்களிடம் கடத்த கூடாது என்கிற அவருடைய எண்ணம் வரவேற்கத்தக்கது. இத்தகைய பிரச்சாரத்தை தன் படைப்புவழியாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அடுத்த சாட்டை’ கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம்.

நடிகர்கள்:சமுத்திரகனி, அதுல்யா,
இயக்குனர்:அன்பழகன்
இசை ஜஸ்டின் பிரபாகர்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.