சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் ரோமியோ ஜூலியட், போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் டி .இமான் இசையில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் , சதிஷ் ரோனித் ராய், ராதா ரவி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “பூமி”

நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி பூமிநாதன் (ஜெயம் ரவி) செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன் (சரண்யா பொன்வண்ணன்) தமிழகத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு வருகிறார். .

அங்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதற்காக குரல் கொடுக்கிறார். மேலும் நாசாவில் பயன்படுத்தபடும் யுக்தியை சொந்த ஊரில் செயல்படுத்த முயற்சி செய்கிறார். இதையறிந்த நாசா, ஊரைவிட்டு வருமாறு அழைப்பு கொடுக்கிறார்கள்.

நாசாவின் அழைப்பை ஏற்காத ஜெயம் ரவி, விவசாயிகளின் நிலை மற்றும் விவசாய நிலங்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதோடு, அதனை சரி செய்யும் முயற்சியில் இறங்குகிறார்.இறுதியில் விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றினாரா இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை .

நாசா விஞ்ஞானியாகவும், இயற்கை விவசாயியாகவும் ஜெயம் ரவி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.. செவ்வாய் கிரகத்தில் கால் வைத்த முதல் மனிதன் என்ற சாதனையை விட, அழிவுப்பாதையில் செல்லும் என் நாட்டை காப்பாற்றுவதே முக்கியம், என்று சொல்லும் இடத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விவசாயிகளுக்காக போராடும் இடத்திலும், அரசியல்வாதியிடம் விவசாயிகளுக்காக பேசும் இடத்திலும் பாராட்டைப் பெறுகிறார்.

நாயகி நிதி அகர்வால் வழக்கம் போல் பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார். ஜெயம் ரவியின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு யதார்த்தம். கலெக்டர் ஜான் விஜய், விவசாயி தம்பி ராமையா, அரசியல்வாதி ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லன் ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர்தான். ஆனால், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருப்பதோடு, சிந்திக்கும்படியும் இருக்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜான் ஆபிரகாம் மற்றும் ரூபனின் படத்தொகுப்பு படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களால் நாடு எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது, என்று பலர் பேசி கேட்டிருப்போம். ஆனால், அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள், என்பதை இயக்குநர் லக்‌ஷ்மண் விரிவாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக அம்பானி மற்றும் அதானி பற்றி தற்போது நாடே பேசினாலும், அவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள், என்பதை வில்லன் ரோகித் ராய் மூலம் மிக தெளிவாக இயக்குநர் விளக்கியிருக்கிறார்.

இயக்குநர் லக்‌ஷ்மண், விவசாயம், தண்ணீர் பற்றாக்குறை அதனால் ஏற்படும் விளைவுகள், அதில் இருந்து நம்மை நாம் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பூமி‘ விவசாயத்தை காக்க வந்த விஞ்ஞானி

நடிகர்கல் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன்
இசை டி இமான்
இயக்குனர் லக்ஷ்மண்
தயாரிப்பு சுஜாதா விஜயகுமார்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.