Rajinikanth Fans organise a Massive Welfare Event held At Sholingar,Kalaipuli S.Thanu,Bobby Simha,Raj bahathur,lollu Saba Jeeva,Karunas,Director Linguswamy and other Grace the Event.
ரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார்.
இது பற்றிய விவரம் வருமாறு :
ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது.
பகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட் , மாபெரும் மேடை ,பேனர்கள் , ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என சோளிங்கரே குலுங்கியது.
மாலையில் விழா தொடங்கியதும் விழாமேடையில் குத்து விளக்கேற்றப்பட்டது. ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருவுருவப் படம் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் ‘கபாலி’ தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.
மேடையில் தமிழ் நாட்டின் 33 மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தலைவர்களும் பங்கேற்றனர். .
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேசும்போது ” இது சாதாரண விழா அல்ல. இது ஒரு முப்பெரும் விழா என் நண்பன் ரஜினி நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா, அவரது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா. இப்படி ஒரு முப்பெரும் விழாவாக இது நடக்கிறது..
ஏழைகளுக்கு நற்பணிகள் செய்ய இவ்வளவு சிறப்பாக பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதைச் சிறப்பாகச் செய்துள்ள சோளிங்கர் ரவியையும் அவரது தம்பி முருகனையும் பாராட்டுகிறேன்.
ரஜினியும் நானும் 45 ஆண்டு கால நண்பர்கள் சினிமாவில் நடிக்கும் முன்பே ரஜினி எனக்கு நண்பன். வாடா போடா நண்பர்கள் நாங்கள். இவ்வளவு உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனாலும் இன்றும் ரஜினியை ‘டா’ போட்டு கூப்பிடும் நண்பன் நான்தான். அப்படி அழைக்கும் உரிமை உள்ளவன் நான்.
சினிமாவில் 40 ஆண்டுகளாக நடிப்பதே சாதனை .அதுவும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது பெரிய சாதனை. 67 வயதிலும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது மிகப்பெரிய சாதனை.
இதற்கெல்லாம் யார் காரணம்? ரஜினி சாதனை மேல் சாதனை படைக்க யார் காரணம்?அன்பு ரசிகர்களாகிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.
ஒரு முறை ரஜினி உடல் நலம் குன்றி ராமச்சந்திரா மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். டாக்டர்கள் பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை நான் அங்கே போனேன் .ரஜினியைப் பார்க்காமல் போகமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் டாக்டர்கள் என்னைப் பார்க்க அனுமதிக்க வில்லை லதாரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் அரைமணி நேரம் என்னை அனுமதிக்குமாறு போராடினார்கன். ஒரு நிமிடமாவது அவரைப் பார்க்க விடுங்கள் என்றார்கள். இவ்வளவு தூரம் இப்படிக் கேட்கிறீர்களே இவர் யார் என்று டாக்டர்கள் வியப்போடு கேட்டார்கள்.அதுதான் நண்பன்.
போய்ப் பார்த்த போது என் நண்பன் ரஜினி, ஒரு குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான். எனக்கு அழுகையே வந்து விட்டது. மானைப் போலத் துள்ளிக் குதித்து வருபவன் அவனால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்கார முடியாது.அப்படிப்பட்ட என் நண்பன் குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான்.
விரைவில் குனமாகிவிடுவான் என்றார்கள். மீண்டும் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்குப் போகிறான் என்றதும் நான் பதறிப் போனேன்.
ரஜினியை ‘டா’ போட்டு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ரஜினியை அவர் வந்தார் ,போனார் என்று சொல்ல எனக்கு வாயே வராது. அவன் இவன் என்று சொல்லித்தான் பழக்கம்.
ஒரு நிகழ்ச்சியில் நான் ‘வாடா போடா’ என்று பேசியதும் எங்கள் தலைவரையே ‘வாடா போடா’ என்றுபேசுகிறாயா என்று ரசிகர்கள் ‘பிடிடா அவனை’ என்று என்னை அடிக்க வந்தார்கள். ரஜினி அவர்களைத் தடுத்து உங்கள் நண்பர்களை வாங்க ஐயா, போங்க ஐயா, சார் என்றா சொல்வீர்கள்? என்று கேட்டதும் அமைதியானார்கள். நட்புக்கு இலக்கணம் ரஜினி.
‘படையப்பா’ படத்தில் நடித்த போது எனக்கும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலும் ‘வாடா’. என்று பேசும் வசனம் வந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயக்கத்துடன் ‘ரஜினி சார் அவ்வளவு பெரிய நடிகர் அவரை நீங்கள் எப்படி இப்படிப் பேசுவது ?’என்று ‘வேண்டாம்’ என்றார். இதை அறிந்த ரஜினி, தடுத்து உள்ளபடியே ‘வாடா’. என்று பேசட்டும் என்றார்.
சிங்கப்பூர் போன ரஜினி திரும்பிவரக் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். ரஜினியின் ஆரோக்கியம், இளமை, சுறுசுறுப்பு எல்லாம் மீண்டும் வந்து நடிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.ரஜினி செத்துப் பிழைத்திருக்கிறார். ரஜினிக்கு உயிர் கொடுத்தது. நீங்கள்தான். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று எப்போது ரஜினி பேச ஆரம்பித்தாலும் சொல்வார். அது உண்மைதான். அவரைக் கடவுளாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் உங்களை கடவுளாக நினைக்கிறார். இந்த விழாவை நடத்தும் சோளிங்கர் என். ரவி யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த விழாவை நடத்துகிறார். இவர் ரஜினி குணமடைய வேண்டி சோளிங்கர் கோவிலில் 1308 படிகளை முட்டிக்கால் போட்டு ஏறியவர். இதை அறிந்த ரஜினி நெகிழ்ந்து போனார். அவரைச் சந்தித்தார் நெகிழ்ந்து போய் ‘என்னப்பா இதெல்லாம்’ என்று கட்டிப்பிடித்துக் கொண்டார். ரஜினி யார் திருமணத்துக்கும் போனதில்லை. இந்த ரவியின் தம்பி முருகனின் திருமண விழாவில் கலந்து கொண்டதுடன் ஓராண்டு கழித்து அவரது குழந்தைக்கும் ‘வைபவி’ என்று ரஜினி பெயர் வைத்தார். அப்படிப்பட்ட ரவி நடத்தும் இந்த விழாவுக்கு ரஜினியை அழைத்தேன். நான் வந்தால் விழா கெட்டுவிடும் என்றார். அவ்வளவு அழகாக இந்த விழா அமைந்திருக்கிறது. “இவ்வாறு ராஜ் பகதூர் பேசினார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது
” இந்த ‘மலரட்டும் மனிதநேயம்’ என்கிற மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்.நான் 1980ல் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட போது ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் போட்டு விளம்பரம் செய்தேன். எனக்குத் தோன்றியதால்’சூப்பர்ஸ்டார்’ என்று போட்டேன். அது ரஜினிக்குப் பிடிக்க வில்லை. ‘வேண்டாம்’ என்றார். ஆனால் மறுத்து மறுநாள் ‘கிரேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார்’ என்று போட்டேன். இப்போது ‘கபாலி’ படம் தயாரித்து வருகிறேன். எந்தப் படமும் இல்லாத சாதனையாக அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது. வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது இதுதான் உண்மை. யாருக்குமே இதுவரை வியாபாரம் இரண்டரைகோடி ரூபாயைத் தாண்டவில்லை.
சென்னை மழை வெள்ளத்தின் போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தங்க இடம்,உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இது போல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன். ” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசும் போது ” நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். அவரைப்போல பேசுவேன்,ஆடுவேன்,பாடுவேன் அப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகன்..
நினைத்துப் பார்க்கிறேன் இப்போது கூட அவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். எல்லாரும் விழா முடிந்து பாதுகாப்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்றுஅவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். இதை நாம் சொல்லக் கூடாது. எல்லாம் அவருக்குத் தெரியும்..நான் ‘முரட்டுக்காளை’ படத்தை 15 முறை பார்த்தவன். நான் இயக்கும் படத்தில் எந்த கதாநாயகன் நடித்தாலும் அதில் ரஜினிசார் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் வசனம் எழுதுவேன். ‘ரஜினி முருகன்’ படத்துக்கு தலைப்புக்கு அனுமதி கேட்ட போது உடனே விட்டுக்கொடுத்தார். ‘ரஜினி முருகன்’ என்கிற பெயர் மேஜிக்கால் அது இன்று வசூலைக் குவித்து வருகிறது. ” என்றார்.
நடிகர் பாபி சிம்ஹா பேசும் போது, ”.நான் நடித்த ‘ஜிகர் தண்டா’ படம் பார்த்து .சூப்பர் ஸ்டார் என்னை அவ்வளவு பாராட்டினார்.இந்தக் கதை எனக்குத் தெரிந்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றார்.சூப்பர் ஸ்டார் என்றால் தலைவர் ஒருவர் மட்டுமே” என்றார்.
நடிகர் லொள்ளுசபா ஜீவா பேசும் போது, “மலரட்டும் மனிதநேயம் என்கிற இந்த விழா மாநாடு போல இருக்கிறது. இது கூட்டப்பட்ட கூட்டமல்ல. தானாக வந்த கூட்டம்.
ஜெருசேலம் தேவாலயத்தில் எவ்வளவோ பேர் காணிக்கை செலுத்தினார்களாம். வசதியானவர்கள் பலரும் காணிக்கை செலுத்தினார்களாம். ஆனால் எவ்வளவோ பேரை விட ஒரு ஏழைப்பெண் கையிலிருந்த இரண்டு நாணயத்தை அப்படியே காணிக்கையாகப் போட்டாளாம். அதுவே பெரிய காணிக்கை யாகப் புகழப்பட் டதாம்.
அதுபோல தங்களிடம் இருப்பதில் கொஞ்சம் கொடுப்பதை விட கையில் இருப்பதை அப்படியே கொடுக்கும் விழாவாக இது இருக்கிறது. .’கோச்சடையான்’ படத்தின் போது தலைவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து. நான் அவர் மாதிரியே பேசி நடிப்பதைப் பார்த்து எத்தனை வயதிலிருந்து இது? என்றார். 5 வயதிலிருந்து என்றேன்.” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது” ஒரு மலைப் பகுதியில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பிய போது புறப்பட்டுப் போன ரஜினி சாரின் கார் திரும்பி வந்தது. விசாரித்த போது தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிக் காத்திருந்த ஒரு ரசிகனுக்காக திரும்பி வந்திருக்கிறார். அந்த ரசிகனுக்குக் காலில் அடிபட்டிருந்ததாம். அதனால் அலையவிட க்கூடாது என்றுதான் போன ரஜினி சார் கார் திரும்பி வந்திருக்கிறது.. அது தான் மனித நேயம்.”என்றார்.
நடிகர் கருணாஸ் பேசும்போது ,” இது எல்லாரும் எதிர்பார்க்கும் விழா. இத்தனைக் காலம் ரசிகர்களாக இருந்த நாங்கள் ஒன்றை மட்டும் கேட்கிறோம். அடையாளம் கேட்கிறோம். மற்றவர்கள் நம்மைக்கேலி பேசுகிறார்கள். நம்மை ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லஅடையாளம் கேட்கிறோம் நாம் யாரென்று காட்டஅடையாளம் கேட்கிறோம் இதில் தயக்கமோ சங்கடமோ இருந்தால் சைகை மட்டும் காட்டுங்கள் நாங்கள் யாரென்று காட்டுகிறோம். ” என்றார்.
விழாவில் நலிவடைந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு 15லட்ச ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள்,இஸ்திரிப்பெட்டிகள
முன்னதாக யூகே.முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது.இவ் விழாவை’ விஜய் டிவி’ தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மற்றும் பண்பலை ஆர்.ஜே. ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Leave a Reply