தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா கூட்டணியில் தேவி 2 வெளியாகியுள்ளது. திரில்லர் காமெடி படமான இந்த படத்தில் மேலும் நந்திதா சுவேதா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, சோனு சூத் ஆகியோர் நடித்துள்ளனர்.

மனைவி தேவியைப் (தமன்னா) பிடித்திருந்த ரூபி பேய் போன பிறகு, தேவி, குழந்தையுடன் அமைதியான வாழ்வை நடத்தி வருகிறான் கிருஷ்ணா (பிரபுதேவா). இருந்தபோதும் பேய் திரும்ப வருமோ என்ற பயம் வருகிறது. அதனால், ஒரு சாமியாரிடம் யோசனை கேட்க, கடலால் சூழப்பட்ட பகுதிக்குள் பேய் வராது, அங்கு போய்விடு என்கிறார் சாமியார். அதனால், மும்பையிலிருந்து மொரீசியஸிற்கு மனைவி தேவியுடன் செல்கிறான் கிருஷ்ணா.

ஆனால், மொரீசியஸில் அலெக்ஸ், ரங்கா ரெட்டி என இரண்டு பேய்கள் கிருஷ்ணாவைப் பிடித்துக்கொள்கின்றன. தங்களது காதலிகளிடம் தங்களது காதலை சொல்வதற்கு முன்பாகவே தாங்கள் விபத்தில் இறந்து விட்டதாகவும் தங்களது காதலிகள் தங்களிடம் ஐ லவ் யூ சொன்னால் மட்டுமே தாங்கள் பிரபுதேவாவின் உடலை விட்டு விலகுவோம் என்றும் பேய்கள் மல்லுக்கட்டுகின்றன..

இதையடுத்து இரண்டு பேய்களுடனும் ஒப்பந்தம் செய்யும் தமன்னா கூடவே கோவை சரளாவின் உதவியுடன், விரைவாக அந்த பேய்களின் காதலிகளை கண்டுபிடித்து அவர்களிடம் ஐ லவ் யூ சொல்ல வைக்க முயற்சி எடுக்கிறார். இதனால் தமன்னா சந்திக்கும் பிரச்சனை என்ன ? தனது கணவரை பேயிடம் இருந்து மீட்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை .

நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல். பிரபுதேவாவிற்கு இதில் மூன்று விதமான மேனரிசங்கள் மூன்றையுமே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் தமன்னாவின் கணவராக இயல்பான மனிதராக வரும் பிரபுதேவா நம்மை ரொம்பவே ஈர்க்கிறார்.

நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். முதல் பாகத்தில் பேயாக மாறி மிரட்டிய தமன்னா, இதில் தனது கணவரை பேய்களிடம் இருந்து மீட்க நடத்தும் காமெடி போராட்டம் ரொம்ப கலகலப்பாகவே இருக்கிறது. அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நடிகர் பிரபுதேவா
நடிகை தமன்னா
இயக்குனர் ஏ.எல். விஜய்
இசை சாம்.சி.எஸ்
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.