Sathura Adi 3500 Movie Audio & Trailer Launch held at Prasad Chennai.25th July 2017.Nikhil Mohan, Jaison, Ganesh Raghavendra, K Bhagyaraj, K Rajan, Kalaipuli S Thanu, Abi Saravanan at the event. Pro – Yuvaraj.
சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். படத்தின் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன்,இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், நடிகர் வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் அறிமுக நாயகன் நிகில் மோகன் பேசுகையில்,‘இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் பின்னணியில் சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என எல்லா அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்ட கமர்சியல் எண்டர்டெயினர் தான் இந்த சதுர அடி 3500. ஏராளமான திருப்பங்களுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக தயாராகியிருக்கிறது.’ என்றார்.
படத்தின் இயக்குநர் ஜாய்சன் பேசுகையில்,‘ இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். திரில்லர் படம். நடிகர் ரகுமான், நடிகை இனியா, எம் எஸ் பாஸ்கர், மனோபாலா போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக சதுர அடி 3500 உருவாகியிருக்கிறது’ என்றார். இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் பேசுகையில்.‘ இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமார் எழுதியிருக்கிறார். அவருடன் பாடல் எழுதிய அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். சென்னையிலிருந்து ஆந்திரா வரை பயணம் மேற்கொண்டே மூன்று பாடல்களையும் எழுதி கொடுத்தார். அவருடைய ஆசி எனக்கும், இந்த படக்குழுவிற்கும் என்றைக்கும் இருக்கும்.’ என்றார்.
எடிட்டர் சுபாஷ் பேசுகையில்,‘சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் வருகைத்தந்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை இனியா, நடிகர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலமான நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் திரைத்துறையில் நிறைய நடைபெறுகிறது. இதனை தவிர்ப்பதற்கான நல்லதொரு நடைமுறையை நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் வரையறை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.
படத்தினை வெளியிடும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராகுல் பேசுகையில்,‘இதற்கு முன் நான் இயக்கிய மூன்று படங்களுக்கு நான் தான் தயாரிப்பாளர். நான் தான் இயக்குநர். அந்த படங்கள் எதுவும் நட்டமில்லை. இந்நிலையில் இந்த படத்தை அண்மையில் பார்த்தேன். ரசித்தேன். அதனால் இப்படத்தை நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். இப்படத்தின் டைட்டில் ரசிகர்களை கவரும் வகையிலும், கதைக்கு ஏற்ற வகையிலும் இருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்கிறேன். இந்த படவிழாவிற்கு நடிகை இனியா கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் ஒரு படவிழாவில் அப்படத்தின் நாயகி கலந்து கொண்டால் அது குறிப்பிட்ட வகையில் படத்தை விளம்பரப்படுத்தும். இதற்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு நடிகை இனியாவிற்கு இருக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் கன்டெண்ட் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.’ என்றார்.
இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாக தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது. இருந்தாலும் நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்.
நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்கவேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வரவேண்டும்.
இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கிறது. இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சதுர அடி 3500 படம் வெளியாவது விசேசம். படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையை பெற்றுத்தருவார். அறிமுக நாயகன் நிகில் சுதந்திரமாக அனுபவித்து நடித்திருக்கிறார். நன்றாக இருக்கிறது.படம் வெற்றிப் பெறும் ’ என்றார். முன்னதாக விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார். விழாவிற்கு வருகைத்தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
Leave a Reply