Traffic Ramaswamy Movie Audio Launch event held at Prasad Lab,Chennai.SA Chandrasekhar, Traffic Ramaswamy, Shankar, Rohini, Ambika, Vicky, Upasana RC, RK Suresh, Vairamuthu, Ponram, M Rajesh, Chetan, Mohan Raman, Five Star Kathiresan at the event. PRO – Sakthi Saravanan.

கிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் ,எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.

உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.

இந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . ? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வடபோச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்கநான் காத்திருக்கிறேன்.” என்றார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,

****இவர் அக்கிரகாரத்து ராமசாமி : ‘டிராஃபிக் ராமசாமி ‘விழாவில் கவிஞர்
வைரமுத்து பேச்சு !*

***அரசு போராட்டங்களை ஒடுக்கக்கூடாது : காரணங்களை ஆராய வேண்டும் : வைரமுத்து பேச்சு

மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது
சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டா?தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா? , சூரியனுக்கு வயதுண்டா? ,காற்றுக்கு வயதுண்டா? கடலுக்கு வயதுண்டா? ,மலைகளுக்கு வயதுண்டா? போராட வயதுண்டா? நெருப்பில் இளையது மூத்தது என்று
உண்டா ?
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

எரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா? என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ் சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார்.. தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.

எல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை . வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்? எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் ? இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.

அரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில்
இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .

அரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். . இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு வைரமுத்து பேசினார்.

விழாவில் நடிகை அம்பிகா பேசும் போது “எஸ்.ஏ.சி. சாருடன் நான் சிகப்பு மனிதனில் வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று , நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், இதில் அது நிறைவேறி இருக்கிறது. ” என்றார்.

நடிகை ரோகினி பேசும் போது , ” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும இருப்பது பெருமை. ” என்றார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது , ” இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.

விழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,

“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை , தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா ” என்றார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா சந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி , இயக்குநர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள் அம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் , மோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் ,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் ,இசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர்பிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .

விழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள். இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்
கொடுத்தது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.