லட்சுமி, மா உள்ளிட்டகுறும்படங்களின் மூலம் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட இயக்குநர் சர்ஜுன், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படம் தான் இந்த எச்சரிக்கை.

அக்கா மகன் தாமஸுக்காக (விவேக் ராஜ்கோபால்) எதையாவது செய்ய வேண்டுமென்று ஜெயிலில் இருந்து வரும் டேவிட்(கிஷோர்) நினைக்கிறான். பைக் திருடிக்கொண்டிருக்கும் தாமஸை வைத்து ஆட்கடத்தல் செய்து அதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறார்கள். அதன்படி ஸ்வேதா (வரலட்சுமி சரத்குமார்) என்ற பெண்ணைக் கடத்துகிறார்கள். இந்தச் செய்தியை ஓய்வுபெற்ற காவலரான சத்யராஜிடம் ஸ்வேதாவின் அப்பா (ஜெயகுமார்) கூறி தனது மகளைக் காப்பாற்றி தரும்படி சொல்கிறார். கடத்தல்காரர்களுக்கும், சத்யராஜுக்கும் இடையேயான போராட்டம் என்ன ஆனது என்பதே இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் கதை.
உணர்ச்சி வேகமும் குற்றவியல் நடவடிக்கைகளும் கலந்த இந்தக் கதையைப் பல திருப்புமுனைகள் கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதையின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதைத் திரையில் வழங்கிய விதத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படம் பார்க்கும் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஒரே நாள், அதிகபட்சமாக இரண்டே இடங்கள், பிரதானமாக ஐந்து கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நிறைவான திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் சர்ஜுன். தான் எடுத்துக்கொண்ட கதையை அதன் களத்தில் அழகாகப் பொருத்திப் பார்வையாளருக்குத் தெளிவாகக் கடத்தியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.
இயக்குநர் ஒளிப்பதிவும் படித்திருப்பதால், காட்சிகள் கூடுதல் அழகாகின்றன. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் டெலிபோட்டோ லென்ஸ் பயன்படுத்தியிருப்பது, அந்தக் காட்சிக்கு அழுத்தம் சேர்க்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதன் அடையாளமும் ஒரு சில காட்சிகளில் வெளிப்படுகிறது.
பணம்தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பணத்துக்காக அப்பாவையும் ஏமாற்றும் பெண். தனது பெண்ணின் ஆசை என்னவென்று அறியாமல் பணத்துக்காக யாருக்கோ திருமணம் ஏற்பாடு செய்வது, நல்லது செய்யும் மாமாவைப் பணத்துக்காகக் கொல்ல நினைக்கும் மருமகன், நேர்மையான அதிகாரியாக இருக்கும் காவலரையும் தனது மகளின் உடல்நலத்துக்காகக் கொள்ளையடிக்க வைக்கும் சூழல் எனப் பணம் படுத்தும் பாட்டை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது படம். அப்படிப் போராடிப் பெற்ற பணத்தை அனுபவிக்க முடியாமல்போகும் அவலத்தையும் சொல்கிறது. பணம் என்பது வெறும் காகிதம் என்பதைப் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்லிப் புரிய வைத்திருக்கிறது படம். யாருமற்ற நிலப்பரப்பில் சிக்கிக்கொள்ளும் சத்யராஜின் கையறு நிலையைக் காட்டிய விதத்தில் பணத்தின் பொருளற்ற தன்மையை இயக்குநர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு காட்சியில் கார் ஹீட்டர் திடீரென்று மக்கர் பண்ணுவதும், கார் பேனட்டை திறந்து சூடு காட்டுவதும் எல்லாம் காட்சியின் பரபரப்புக்காகத் திணிக்கப்பட்ட உத்திகளாகவே இருக்கின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.
வலுவான கதையும் அதைச் சொல்வதற்கு அழுத்தமான காட்சிகளும் இருந்தாலும் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது. படம் ஒருகட்டத்துக்கு மேல் நகராமல் சண்டித்தனம் செய்கிறது. அடுத்து வருவது முன்கூட்டியே தெரிவதும் மெதுவாக நகருவதும் சேர்ந்து பார்வையாளரைச் சோர்வடைய வைக்கின்றன.
நீ புத்திசாலி என்றால் நான் முட்டாள் இல்லை என்று உனக்குத் தெரியும், ஒரு முறைதான் தப்பு பண்ணிணேன். மறுபடியும் அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன், ஜெயில் வாழ்க்கை நிறைய மாத்திருக்கு. அது எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சுருச்சு போன்ற பல வசனங்கள் காட்சிகளோடு பொருந்தி ஒலிப்பதால் மனதில் நிற்கின்றன.
சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியிலும், தனது மகளோடு இருக்கும் காட்சிகளிலும் சத்யராஜின் நடிப்பில் அபாரமான முதிர்ச்சி. விவேக் ராஜ்கோபால், வரலட்சுமி கெமிஸ்ட்ரி நன்றாகவே அமைந்திருக்கிறது. யோகி பாபுவை திருஷ்டிக்காகப் பயன்படுத்தியது போல் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.