ஹரி உத்ரா இயக்கத்தில் சிவா நிஷாந்த், ஐரா, ஆண்டனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கல்தா’

தமிழக எல்லையில் இருக்கும் தன்னிலங்காடு என்ற கிராமத்தில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி குவிக்கிறார்கள். கவுன்சிலர், எல் எல் ஏ மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் பணம் பெற்றுக் கொண்டு இந்த நாச வேலைக்கு துணை போகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கழிவு பொருட்களின் பாதிப்பால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் சண்டை போடுகிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார். இதனைக் கண்டு அக்கிராமத்தில் உள்ள, இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இறுதியில் இவர்களது, முயற்சி வெற்றி பெற்றதா..?? கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன ஆனார்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் சிவா நிஷாந்த் நடனம், சண்டைக்காட்சிகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ஐரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அறிமுகமான ஆண்டனி, இப்படத்தில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மனைவியுடனான காதல், மக்களுக்கான புரட்சி, என தனது கேரக்டரை திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்.

ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது. வாசுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது.

கழிவுகள் கொட்டப்படுவதால் கிராமங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது. பணத்திற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள். கழிவுகளால் சுகாதாரம் எப்படி கெடுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. இவரின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகள்.

மொத்தத்தில் ‘கல்தா’ அரசியலை கற்பிக்கும் படம் .

நடிகர்கள் சிவா நிஷாந்த், ஐரா, ஆண்டனி
இசை ஜெய் கிரிஷ்
இயக்குனர் ஹரி உத்ரா
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.