சென்னையில் மர்ம நபரால் தனிமையில் இருக்கும் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுத்து உடலை எரிக்கும் காட்சியில் இருந்து தொடங்குகிறது திரைப்படம்.

நாயகி டாப்ஸி ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார் மனநோயில் பாதிக்கப்பட்டிருக்கிறார். வீடியோ கேம் தயாரிப்பு நிபுணரான டாப்ஸிக்கு வெளிச்சம் இல்லாமல் அவரால் வீட்டிற்குள் இருக்க முடியாது. அவருக்கு துணையாக கமலா என்பவர் உதவிக்கு இருக்கிறார். ஒரு நாள், தான் விரும்பி வரைந்த டாட்டூ சின்னம் வலிக்க தொடங்குகிறது. அது பற்றி தெரிந்துகொள்வதற்காக டாட்டூ கலைஞர் ரம்யாவை சந்திக்கிறார். எந்த ஒரு டாட்டூம் ஒரு ஆண்டுக்குப் பின்பு வலி இருக்காது என்கிறார். அப்போது, ஒரு உண்மையையும் சொல்கிறார். அந்த டாட்டூ ஒரு பெண்ணின் அஸ்தி கரைக்கப்பட்ட மையில் குத்தியது. அது தெரியாமல் நடந்தது என்கிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.

இந்நிலையில், மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து டாப்ஸி தப்பித்தாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை

நாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார்.

டாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

வீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.

நடிகர்கள் : டாப்ஸி , வினோதினி, சஞ்சனாநடராஜன், அனிஷ் குருவில்லா, ரம்யா சுப்பிரமணியன்
இசை : ரோன் ஈதன் யோஹன்
இயக்கம் : அஸ்வின் சரவணன்
தயாரிப்பு : சசிகாந்த் (ஓய்நாட் ஸ்டுடியோ)
மக்கள் தொடர்பு: நிகில்

Leave a Reply

Your email address will not be published.