கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்திருக்கிறார் .

96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்தும் இருக்கிறார்.

அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

மொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்னஸ் படத்தில் படு அப்பட்டமாய்த் தெரிகிறது. படத்தின் தலைப்பில் இருந்தே அது தொடங்குவதை உணரலாம். எல்லாப் பாத்திரங்களுமே நகைச்சுவை என்ற பெயரில் வசனத்தைக் கூறு போட்டுள்ளனர். மூத்த கலைஞர்களான ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் சந்தானபாரதிக்கும் கூட அதே நிலைதான். ‘இளைஞர்களை ஊக்குவிக்கணும் சார்’ என்ற வசனத்தைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன் என டெல்லிகணேஷ் உறுதியாக விலகிக் கொண்டிருப்பார் போல! அதனால் அபூர்வமாய் அவர் மட்டும் வசனரீதியாக டைலூட் ஆகாமல் தனது வழக்கமான நடிப்பிற்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.