கேஜேஆர் ஸ்டுடியோ கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், அபய் தியோல், ரோபோ ஷங்கர், அழகம்பெருமாள், குமாரவேல் ஆகியோர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்  “ஹீரோ”

சக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சக்திமான் போல் ஹீரோவாக வேண்டும் என்று மனதில் தோன்றும்  ஒரு கட்டத்தில் சக்திமான் என்பது ஒரு கற்பனை கேரக்டர்தான், உண்மை கிடையாது, சக்திமான் யாரையும் காப்பாற்ற மாட்டார், நம்மை நாமேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும், உண்மையான வாழ்க்கைக்கும் சக்திமான் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிந்து கொள்கிறார். அதன் பின்னர் தன்னுடைய தந்தையை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மார்க்‌ஷீட்டை ஒரு மிகப்பெரிய தொகைக்கு விற்கும் சக்தி, போலிச் சான்றிதழ் அச்சடிப்பது, கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறார்.

மறுபுறம் அர்ஜுன் ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் பெயில் ஆன மாணவர்களை திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே அர்ஜுனின் நோக்கம். அந்த வகையில் இவானா, ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் ஆசையை அர்ஜுனுக்கு தெரியாமல் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி விடுகிறார்.

இவானாவின் கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் அபி தியோல், சில சூழ்ச்சி வேலைகள் செய்கிறார். இவான தவறான முறையில் தான் இதைக் கண்டுபிடித்தார் என்று நிரூபிக்கிறார்கள். இதனால் இவானா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இவர்களை பழிவாங்க சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறி என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் தன்னுடைய ஹீரோ கேரக்டரை முடிந்தளவு செய்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் ஆக்சன், காமெடி படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதல் றையாக ஒரு முழுநீள கதையம்சம் நிறைந்த படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகி கல்யாணிக்கு தான் பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்து உள்ளார்.

படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன் தான், தனது அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். வில்லன் அபய் தியோல் அமைதியாக வந்து அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த நாட்டிலுள்ள கல்வியாளர்கள் எதை உருவாக்குகிறார்கள்? எதை அழிக்கிறார்கள் என்பதை அவருடைய கதாபாத்திரம் மூலம் இயக்குனர் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.. மேலும் இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை அதிரவைக்கும் அளவில் உள்ளது. குறிப்பாக ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவாகும் காட்சிகளின் பின்னணி, வில்லனுக்கு வரும் பின்னணி இசையும் சூப்பர்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தனது அதிகபட்ச உழைப்பை கொட்டியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இருட்டில் இருந்தாலும் அந்த காட்சிகள் எல்லாமே பார்வையாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது. படத்தொகுப்பாளர் ரூபன் பணி மிக சிறப்பானது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் நம் நாட்டின் கல்விமுறை வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவது இல்லை. குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், அவர்களது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிய விதம் சிறப்பு.

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், அழகம்பெருமாள், குமாரவேல்,
இயக்கம் : பி.எஸ். மித்ரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : கேஜே ஆர் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு  சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.