நீலம் புரடக்ஷன் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று, மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கி விடுகிறது. அந்த குண்டு, ஒரு திருடன் மூலமாக சென்னையில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு வந்தடைகிறது. அங்குதான் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் தினேஷ்.

லாரி டிரைவராக வேலை செய்யும் தினேஷும், டீச்சராக இருக்கும் ஆனந்தியும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு ஆனந்தியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து வருகிறார்கள்

குண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். அதை பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேஷ், தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிய வருகிறது. இறுதியில் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார்? தினேஷ் – அனந்தி ஜோடி சேர்ந்தார்களா இல்லையா ? என்பதே மீதிக்கதை

அட்டக்கத்தி தினேஷ் அழுக்கு லுங்கியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, குண்டை பாதுக்காக்க பதறி, காதலியை தேடி பதட்டத்தில் என நடித்து அசத்தியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் கதையோடு இணைந்து பயணம் செய்து அனைவரையும் ரசிக்க வைத்த கயல் ஆனந்தி, இந்த படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். கொஞ்சும் தமிழில் கொஞ்சும் காதல் கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுக்கிறார் ஆனந்தி.

முனிஷ்காந்த் ,இரண்டாம் பாதி முழுவதும் கலகப்பிற்கு பஞ்சமில்லை.அந்தளவுக்கு படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறார். போலீஸாக வரும் லிஜிஸ், சமூக போராளியாக வரும் பத்திரிகையாளர் ரித்விகா, சரண்யா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மாரிமுத்து என அனைவரும் படத்தின் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் தான்.

டென்மா இசையில் பாடல்கள் ரகம். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை கொடுத்திருக்கிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். சண்டைக் காட்சிகளாக இருக்கட்டும், சேஸிங் காட்சிகளாக இருக்கட்டும் அனைத்திலும் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.

குண்டு மற்றும் காதல் என இரண்டையும் ஒரு சேர பயணிக்க வைத்து படபடப்பையும் வியப்பையும் தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

மொத்தத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போருக்கு முற்றுப்புள்ளி

நடிகர்கள்; தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், ரவி, ஹரி, மாரிமுத்து
இயக்கம் : அதியன் ஆதிரை
இசை : டென்மா
தயாரிப்பு : நீலம் புரடக்ஷன் (பா.ரஞ்சித்)
மக்கள் தொடர்பு குணா

Leave a Reply

Your email address will not be published.