எபினேஷர் தேவராஜ், நீலிமா நடிப்பில் செல்வேந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கருப்பங்காட்டு வலசு’

நாகரிக வளர்ச்சியில் மிகமிக பின்தங்கிய, அடிப்படை வசதிகளற்ற, ஆணவக் கொலைகள் நடக்கிற ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற கிராமத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஊர் தலைவரின் மகளான நீலிமா, தனது சொந்த கிராமத்தின் நிலை அறிந்து, அங்கு மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார். நீலிமாவின் முயற்சியால் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கனிணி பயிற்சி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் கிராம மக்கள், கோவில் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அன்றைய இரவு கிராமத்தில் உள்ள 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மரணமடைய, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்! போலீஸ் விசாரிக்க விசாரிக்க மரணங்களுக்கான காரணங்கள் பதற வைக்கிறது, மரணங்களுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை, பல ட்விஸ்ட்டுகளோடு சொல்வது படத்தின் மீதிக்கதை.

ஊர் மீது அக்கறை, மக்கள் மீது பாசம், நல்லது செய்ய முன்வரும் போது மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத ஆற்றாமை, கொலைகள் நடந்தபின் பரிதவிப்பு என ஊர் தலைவரின் மகளாக நடித்திருக்கும் நீலிமாவும், போலீஸாக நடித்திருக்கும் ஜார்ஜ் விஜயும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள். ஊரைக் காவல் காக்கும் பெரியவர் மாரி செல்லதுரையின் பாத்திரம் புதிராக இருப்பது திரைக்கதையின் பலம்.

ஆதித்ய சூர்யாவின் இசையில் ”புயல் காத்தா…” பாட்டு இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவில், கிராமத்தின் குறுகிய தெருக்கள் கூட, கதாப்பாத்திரங்களாக முக்கியம் பெருகின்றன.இடைவேளைக்குப் பிந்தைய இருள் காட்சிகளுக்கு கேமராவால் வெளிச்ச உயிர் பாய்ச்சியிருக்கிறார் ஷ்ரவண் சரவணன்.

கிராமத்தில் நடக்கும் திருட்டு, அதில் இருந்து மக்களை காப்பாற்ற பொருத்தப்படும் சிசிடிவி கேமரா, அதே கேமராவினால் ஏற்படும் மரணம், என ஒவ்வொரு சம்பவத்தையும், மற்றொரு சம்பவத்துடன் முடிச்சிப்போட்டு இயக்குநர் செல்வேந்திரன் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published.