தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நடிப்பில் உருவாகி, பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் கோ.தனஞ்செயன் வெளியிட்டிருக்கும் திரைப்படம் ‘கொலைகாரன்’

விஜய் ஆண்டனியும் நாயகி ஆஷ்மாவும் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கின்றனர். இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ‘ஹாய்’ சொல்வதோடு முடிந்துவிடுகிறது அவர்களது உறவு. இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு கிடைக்கிறது. இதை போலீஸ் அதிகாரியான அர்ஜூன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது. மேலும் இறந்த நபர், ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால், இந்த கொலையை ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இந்த கொலைக்கு எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர் என்று தெரிந்துக் கொள்கிறார் அர்ஜூன்.

இந்நிலையில் ஒருசில திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த திருப்பங்கள் என்னென்ன? உண்மையான கொலைகாரன் யார்? கொலை செய்ய என்ன காரணம்? விஜய் ஆண்டனிக்கும் ஆஷ்மாவுக்கும் இடையே என்ன உறவு? என்பதே படத்தின் மீதிக்கதை.

அழுத்தமான வேடத்தை அசால்டாக செய்யக்கூடிய விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதை. இப்படிப்பட்ட படங்களுக்கு சரியான தேர்வு விஜய் ஆண்டனி மட்டுமே, என்று முத்திரை குத்தும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார்.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் பொருத்தமாக இருக்கிறார். பல படங்களில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் மிரட்டியிருந்தாலும், அப்படிப்பட்ட அலட்டல்கள் எதுவும் இல்லாமல், அறிவுக் கூர்மையால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அதிகாரியாகக் கைதட்டல் வாங்குகிறார்.

ஹீரோயின் அஷிமா நர்வாலை சுற்றி கதை நகர்ந்தாலும், அவரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் இருக்குநருக்கு இருந்த தெளிவை, அவரது நடிப்பிலும் பார்க்க முடிகிறது. சீதா, நாசர் போன்றவர்கள் ஒரு சில காட்சிக்கு வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.சைமன் கே கிங்கின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். பின்னணி இசையின் வாயிலாக எவ்வளவு சுவாரசியமூட்டுகிறாரோ, அதே அளவுக்கு டூயட்களில் போட்டுத் தாக்குகிறார்.

இரண்டு விதமான கதைகளை ஒரே நேர் கோட்டில் சொல்லி புரிய வைப்பது என்பதே சவாலானது. அதுவும் இதுபோன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை அப்படி சொல்வது ”கரணம் தப்பினால் மரணம்” என்பது போல தான், ஆனால், அதை சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்

நடிப்பு – அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால். நாசர். சிதா மற்றும் பலர்..
தயாரிப்பு – தியா மூவீஸ்
இயக்கம் – ஆண்ட்ரூ லூயிஸ்
இசை – சைமன் கே கிங்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.