லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன் நடிப்பில் ஈ.இப்ராகிம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கொம்பு’

திரைப்படம் எடுப்பதற்காக கதை எழுதிக் கொண்டிருப்பவர் ‘லொள்ளுசபா’ ஜீவா. அவருடைய சித்தப்பா பாண்டியராஜன். பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி திஷா பாண்டே. அவருடைய தோழி புவிஷா. எல்லாருமாகச் சேர்ந்து ஒரு கிராமத்துக்குப் போகிறார்கள்.

அந்த கிராமத்தில் பேய்ப் பிசாசுகளை மாட்டுக் கொம்பில் அடக்கி வைக்கும் சாமியார் ஒருவர் இருக்கிறார். அங்கு ஒரு வீட்டில் பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கு அந்த கொம்பு’தான் காரணம் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

திஷா பாண்டே, அந்த வீட்டில் இருக்கு ஆவி குறித்து ஆராய செல்லும் போது, ஆவி மீது நம்பிக்கையில்லாத ஜீவாவும் அவருடன் செல்கிறார். இறுதியில் அந்த வீட்டில் நடக்கும் மரணங்களுக்கு காரணம் ஆவியா அல்லது ஆசாமியா என்பதே படத்தின் மீதிக்கதை .

ஜீவாவின் ஒவ்வொரு அசைவிலும் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதை, பச்சை குழந்தை கூட சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதற்காக, நடிப்பிலும் அதை காட்டுவது சரியல்ல என்று தான் தோன்றுகிறது. மற்றபடி ஆக்‌ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், காமெடி நடிகரை தாண்டிய ஒரு நாயகனாக ஜீவா வலம் வருகிறார். திஷா பாண்டே வழக்கமான நாயகியாக அல்லாமல் கதையை நகர்த்துகிறார்.

பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், அம்பானி சங்கர், யோகேஸ்வரன் என காமெடி நடிகர்கள் தங்களால் முடிந்த வரை படத்தை சுவாரசியமாக்கி உள்ளார்கள். வில்லனாக வரும் எம்.பன்னீர்செல்வமும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

சுதீப்பின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகாகவும், பேய் வீட்டின் காட்சிகள் திகிலாகவும் இருக்கிறது. தேவ் குருவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பேய் படங்கள் என்றாலே, காமெடி கலந்த திகில் கலாட்டாவாகவே இருக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து திரைக்கதை அமைக்காமல், புதிய விஷயம் ஒன்றை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் இ.இப்ராகிம், கமர்ஷியலான ஒரு திகில் படத்துடன், மூட நம்பிக்கையை ஒழிக்கும் படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘கொம்பு’ பேயைத் தேடி ஒரு பயணம்!

Leave a Reply

Your email address will not be published.