ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோரது நடிப்பில்,இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில், வெளியாகியிருக்கும் படம் ‘மகாமுனி’
மகாதேவன் மற்றும் முனிராஜ் என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் ஆர்யா அருமையாக நடித்துள்ளார்.கார் ஓட்டுனராக இருக்கும் மகாதேவன் என்ற மகா (ஆர்யா), தன் மனைவி (இந்துஜா), குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அரசியல்வாதியான முத்துராஜ் (இளவரசு) சொல்லும் குற்றச்செயல்களுக்கான திட்டங்களையும் அவ்வப்போது தீட்டித்தருகிறார்.
ஒரு முறை, முத்துராஜ் சொல்வதன் பேரில் அரசியல்வாதி ஒருவரைக் கடத்திவந்து தருகிறார் மகா. அந்த அரசியல்வாதியை முத்துராஜ் கொன்றுவிட, அது பெரிய விவகாரமாகிவிடுகிறது. அந்த வழக்கில் மகாவை மாட்டிவிட முயற்சிக்கிறார் முத்துராஜ்.
மற்றொரு கதாபாத்திரமான முனிராஜ் ஈரோட்டில் உள்ள கிராமத்தில் இயற்கை விவசாயம், ஆன்மீகம், சேவை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். உள்ளூரில் செல்வாக்குள்ள ஜெயராமன்(ஜெயப்பிரகாஷ்) மகள்(மஹிமா நம்பியார்) ஆர்யாவின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டு அவருடன் நெருங்கிப் பழகுகிறார். இதைக் கேள்விப்பட்டு, சாதியின் காரணமாக ஆர்யாவை கொல்ல நினைக்கிறார் ஜெயராமன்.
இப்படி வெவ்வேறு பகுதிகளில் வாழும் மகா மற்றும் முனி ஆகிய இரண்டு பேரும் தங்களது உயிருக்கு வரும் ஆபத்தில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்களா, இல்லையா என்பதி படத்தின் மீதிக்கதை.
மகா, முனி என்ற இருவேடங்களில் ஆர்யா. மகாவாக கோபம், ஏழ்மையினால் வரும் இயலாமை என நடுத்தரவயது இளைஞரை கண்முன் கொண்டுவந்திருக்கிறார். முனியாக அமைதியான, தெளிவான சிந்தனை என ஒரு சாந்த சொரூபியாக தோன்றுகிறார். குறிப்பாக ஒற்றை காலில் அமர்ந்து யோகா செய்யும் காட்சி அவரது கடின உழைப்பிற்கு சாட்சி.
மகாவின் மனைவியாக இந்துஜா ஒரு ஏழை மனைவியாக ஆசைகள், தேவைகள் எதுவும் கிடைக்காமல் கணவனை குறை சொல்வது, பின்னர் சமாதானமாகி கொஞ்சுவது என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அரசியல், வாழ்க்கை உள்ளிட்ட எல்லாவற்றிலும் தெளிவான சிந்தனை உள்ள இளைஞியாக மஹிமா நம்பியார். வறட்டு கெளரவம் கொண்ட கிராமத்து பெரிய மனிதரான தனது தந்தையை எதிர்த்து நிற்கும் இடங்களில் மாஸ்.
படத்தில் பாராட்டத்தகுந்த மற்றொரு அம்சம் அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவு. தமனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது
மெளனகுரு படம் மூலம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாந்தகுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற கனமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் கவர்கிறார். இந்த படம் மூலம் ஒரு நாவலைப் படிப்பது போன்ற ஒரு அனுபவத்தை திரையில் காண்பித்திருக்கிறார். மகா-முனி என இருவரின் வாழ்க்கையை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர்கள் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ரோகிணி, இளவரசு, ஜெயப்பிரகாஷ்,
பின்னணி இசை தமன்
இயக்கம் சாந்தகுமார்
மக்கள் தொடர்பு யுவராஜ்
Leave a Reply