தயாரிப்பாளர் சஷிகாந்த் மற்றும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இணைந்து தயாரிக்க, மடோன் அஸ்வின் இயக்கத்தில் பாரதி சங்கர் இசையில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் ஆகியோர் நடிப்பில் ‘மண்டேலா’ படம் வருகின்ற 4ம் தேதி விஜய் தொலைக்காட்சியிலும் மற்றும் அதற்கு அடுத்த நாளான 5-ம் தேதி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் மரத்தடியில் முடி திருத்தும் வேலை பார்ப்பவர் யோகிபாபு.. தனக்கென சொந்தமாக ஒரு சலூன் அமைக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைக்கிறார். பணம் திருட்டு போகாமல் இருக்க, அந்த ஊர் போஸ்ட் மாஸ்டர் ஷீலா ராஜ்குமாரின் ஆலோசனையின் பேரில் சேமிப்பு கணக்கு துவங்கி பணத்தை சேமிக்கிறார். எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாத, ஊரார் எல்லோராலும் இளிச்சவாயன் என அழைக்கப்படுகின்ற யோகிபாபுவுக்கு நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டி, ஆதார் எண், வாக்களர் அட்டை உள்ளிட்ட பலவற்றுக்கும் விண்ணப்பித்தும் தருகிறார் ஷீலா ராஜ்குமார்.

அந்தசமயத்தில் ஊரில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வருகிறது. ஊருக்குள் தொழிற்சாலை அமைக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் கோடிகளை கமிஷனாக பெறலாம் என நினைக்கிறார் எம்.எல்.ஏ.. ஆனால் ஊர் தலைவர் சங்கிலி முருகன் நேர்மையானவர் என்பதால், தெக்கூர், வடக்கூரை சேர்ந்த அவரது இரண்டு மனைவிகளின் வாரிசுகளையும் ஜாதி ரீதியாக தூண்டிவிட்டு தலைவர் பதவிக்கு போட்டியிட செய்கிறார்.

இருவருக்கும் சரிசமமான வாக்குகள் கிடைக்க, அந்த கிராமத்தில் புதிதாக வாக்களர் பட்டியலில் இணைந்த யோகி பாபுவின் வாக்கு யாருக்கு கிடைக்கிறதோ, அவர் தான் வெற்றி பெறுவார், என்ற நிலை ஏற்படுகிறது. இரண்டு வேட்பாளர்களும் யோகி பாபுவின் வாக்கை பெறுவதற்கு செய்யும் முயற்சிகளும், தனது ஒரு வாக்கினால் என்னவாக போகிறது, என்று நினைக்கும் யோகி பாபுவின் ஓட்டால் அந்த கிராமத்தின் தலை எழுத்தே மாறுகிறது. இறுதியில் யோகிபாபு என்ன செய்தார்.? யோகிபாபுவை அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை..

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது காமெடியை கடந்து நல்ல குணச்சித்திர நடிகர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.ஒரு சிலருக்கே அது வாய்க்கும்.. அப்படி பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து யோகிபாபுவுக்கு மீண்டும் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கும் படம் தான் இந்த மண்டேலா.

போஸ்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார்.. மிக பொருத்தமான நடிப்பு.. சங்கிலி முருகன், வயதானாலும் இப்போதும் கிங்கு தான் என நிரூபிக்கிறார்.. குறிப்பாக அவர் இறந்துவிட்டார் என பதறிப்போய் வீடு தேடி வருபவர்களிடம் காட்டும் அலப்பறை செம லொள்ளு.. யோகிபாபுவுடன் கூடவே வரும் அந்த சிறுவன் ரொம்பவே பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறான். மற்றபடி இரண்டு போட்டியாளர்களாக நடித்திருப்பவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளாக நடித்திருப்பவர்கள், ஊர்க்காரர்கள் என அனைவருமே அந்த ஊர் மனிதர்களாகவே மாறி இருக்கிறார்கள்.

கிராமத்தை அதன் மண் மணம் மாறாமல் படமாக்கி இருக்கும், குறிப்பாக அந்த மரத்தடியை கூட ஒரு கதாபாத்திரமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவில் அவ்வளவு நேர்த்தி. இசையமைப்பாளர் பரத் சங்கர் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் கவனத்தை ஈர்க்கிறார்

அரசியல் நையாண்டி திரைப்படமாக இருந்தாலும், மக்களுக்கு எளிதாக புரியும்படி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஓட்டுக்கு பணம் வாங்கும்போது ஒரு ஊரின் வளர்ச்சி எப்படி இருந்தது. ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று சொன்னபோது அதே ஊர் எப்படி மாறுகிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்

மொத்தத்தில் ‘மண்டேலா’ஓட்டு யாருக்கு

நடிகர்கள் ; யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் மற்றும் பலர்,
இசை ; பாரதி சங்கர்
டைரக்சன் ; மடோன் அஸ்வின்
மக்கள் தொடர்பு ; நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.