பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார். மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர். தயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கோலப்பன் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கியிருக்கிறான். ஒருநாள் அதிகாலையில் அப்பா இறந்துவிட்ட செய்தி வருகிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு தன் சொந்த ஊருக்குச் செல்கிறான். அவரை நல்லடக்கம் செய்வதற்கான வேலைகளில் அவனும் ஊரிலுள்ள அவன் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள். ஊருக்கு வெளியே வசிக்கும் இவர்களுடைய வீடுகளில் யாரேனும் இறந்தால் உடலைப் பொதுப் பாதை வழியே எடுத்துச் செல்ல முடியாது. பாதையற்ற பாதையாக இருக்கும் தனி வழியில் எடுத்துச் சென்று தனி இடத்தில் புதைக்க வேண்டும்.
இந்த முறை அதை மாற்ற வேண்டும் என்று கோலப்பனும் அவன் நண்பர்களும் முடிவு செய்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி என்ன, கடைசியில் என்ன ஆனது என்பதுதான் ‘மனுசங்கடா’. தமிழகத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோலப்பனின் உறவினர்களும் நண்பர்களும் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் தீர்வை நோக்கி எடுத்து வைக்கப்படும் சரியான அடி. காவல் துறை, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் என அவர்கள் போகாத இடம் இல்லை. கோரிக்கை, வாக்குவாதம், மறியல், போராட்டம், தீக்குளிப்பு முயற்சி என்று செய்யாத முயற்சி இல்லை. இத்தனையும் சேர்ந்து அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. எல்லாவற்றையும் மீறி ஆதிக்கச் சாதியின் திமிரும் எண்ணிக்கை பலமும் அதிகாரப் பீடத்தின் அடாவடித் தந்திரங்களும் வெற்றி பெறுகின்றன.
சில காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன. காவல் துறையினர் பலவந்தமாகச் சடலத்தைக் கைப்பற்ற முனையும்போது கூட்டமாகச் சேர்ந்து உடலை வீட்டுக்குள் எடுத்துச்சென்று கதவைத் தாழிட்டுக்கொள்ளும் காட்சி அதில் ஒன்று. பொதுப் பாதைக்குள் கொண்டு செல்லப்படும் என்னும் உத்தரவாதம் கிடைக்கும்வரை அந்த மக்கள் போராடும் விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை வெளியே வரவழைக்கக் காவல் துறை செய்யும் தந்திரங்கள் அமைப்பின் குரூர புத்தியை அப்பட்டமாகக் காட்டுகின்றன. காவல் துறைக்கு மரியாதை கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் மக்கள் ஒருகட்டத்தில் மோதலுக்குத் தயாராகும் தருணமும் அப்போது ஒலிக்கும் பறையொலியும் பார்வையாளர்களுக்குள் பரபரப்பைப் பற்றவைக்கின்றன. தலையின் மண்ணெண்ணெயைக் கொட்டிக்கொண்டு உயிரை விடத் தயாராகும் மக்கள் பதைபதைக்க வைக்கிறார்கள். கோலப்பனின் அம்மாவின் கூக்குரல் நம் மனசாட்சியை உலுக்குகிறது.
நவீன நாடகங்களில் நடித்துவரும் ராஜீவ் ஆனந்த் கோலப்பனாக நடித்திருக்கிறார். கோலப்பனின் அம்மாவாக நடிக்கும் மணிமேகலை, கோலப்பனின் தோழர்களில் ஒருவராக நடித்துள்ள விதுர் ராஜன், கோலப்பனின் தோழியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடிக்கும் கருணா பிரசாத் ஆகியோர் கதையை நன்கு உள்வாங்கித் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவு சம்பவம் நடக்கும் இடத்தின் சூழலை அதன் சகலவிதமான தன்மைகளோடும் நம் கண்முன் நிறுத்துகிறது. ஆனந்த் ஷங்கரின் இசை பாத்திரங்களில் ஒன்றாக மாறி, படத்தோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.