எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர்,, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்டர்’

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் செம ஹிட் அடித்தது. கொரோனா ஊரடங்கு பிறகு திரையில் வரும் மிகப் பெரிய படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

உளவியல் துறை பேராசிரியரான ஜே.டி (விஜய்). கல்லுரி ஒன்றில் பணியாற்றுகிறார். ஜே.டி.,க்கு குடிப்பழக்கம் அதிகம். கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஜே.டி, அங்கு மாணவர்களுக்கு இடையேயான தேர்தலை நடத்தி முடிக்கிறார். ஆனால், தேர்தல் முடிந்ததும் சில பிரச்சனைகள் வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், சக பேராசிரியையாக வரும் சாரு (மாளவிகா மோகனன்) அக்கறையின் படியும் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆசிரியராக செல்கிறார்.

அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியை பவானி விஜய்சேதுபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு உள்ள சிறுவர்களை தனது சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. இதனை விஜய் எதிர்க்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

தளபதி விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் இதில் புதுவிதமாக தெரிகிறார். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனம் வேற லெவல். படத்தில் தான் ஏன் குடிக்கிறேன் என்ற கேள்விக்கு அடிக்கடி விஜய் சொல்லும் விதவிதமான கதைகள் ரசிக்கும்படி இருக்கிறது விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம். அது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கி இருக்கிறார். மாளவிகா மோகனன், அழகு, பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பவானியாக வரும் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக மிரட்டியிருக்கிறார். தனக்கென கிடைத்த கதாப்பாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக அர்ஜுன் தாஸும் நடிப்பில் மிரட்டியுள்ளார். மேலும் சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அனிருத்தின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பாடல்கள் உருவாக்கிய விதம் நன்றாக உள்ளது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. விஜய், விஜய் சேதுபதி மோதும் சண்டை காட்சிகள் மாஸாக உள்ளது.

விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திறமையாக இயக்கியுள்ளார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. படத்தில் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ‘மாஸ்டர்’வாத்தி ரெய்டு

நடிகர்கள் : தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு
இசை அனிருத்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு எஸ்.சேவியர் பிரிட்டோ
மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.

Leave a Reply

Your email address will not be published.