வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா, அரீஷ்குமார், வழக்கு எண் 18/9 முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், வி கே சுந்தர், சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் சீமான் ஆகியோர் நடித்திருக்கும் ’மிக மிக அவசரம்”. லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.

விஐபி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வருவதால் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் முத்துராமன் , பெண் போலீஸ் ஸ்ரீப்ரியங்காவை பாதுகாப்பு பணிக்காக ஒரு மேம்பாலத்தில் நிற்க வைக்கிறார். சிறுநீர் கூட கழிக்க முடியாத நிலையில் நாள் முழுவதும் நிற்கவைத்து படாத பாடுபடுத்துகிறார் உயர் அதிகாரி முத்துராமன்.

காவல் பணியில் சந்திக்கும் அவலம் ஒரு புறம் இருக்க தன்னுடைய அப்பா, அக்காவை இழந்து அக்காவின் மகளை, தனது குடிகார மாமனிடம் இருந்து பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பான பெண்ணாகவும் காதலியாக மறுபுறமும் சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரீ பிரியங்கா. இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்று தரும்

உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் அதில் இருந்து இயற்கை எப்படி அவரை காப்பாற்றுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

பெண் காவல் அதிகாரி பாலத்திற்கு மேல் பணியில் ஈடுபட்டு இருக்க போது காலை முதல் மாலை வரை அவர் அனுபவிக்கும் சங்கடங்களை, சந்திக்கும் மனிதர்களை, உடல் ரீதியான பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா.

குரூர புத்தி கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியாக முத்துராமன்..பெண் போலீசை சீண்டி ரசிக்கும் ஓவ்வொரு இடத்திலும், ‘‘அடப்பாவிப் பயலே..‘‘ என திட்ட தோன்றுகிறது. இந்த திட்டு தான் அவரது நடிப்புக்கு கிடைத்த பாராட்டு. அவரின் மேல் அதிகாரியான சீமான். வக்ர புத்தி கொண்ட அந்த போலீஸ் அதிகாரியை வரவழைத்து ‘விடு விடு‘ என விடும்போது எழுந்து நின்று கைத்தட்ட தோன்றுகிறது..போலீஸ் படும் பாட்டை இயல்பாக சொல்லி இருக்கும் இன்னொரு போலீஸ் ராமதாஸ். மற்றும் ‘சேதுபதி‘ லிங்கா. ‘ஆண்டவன் கட்டளை‘ அரவிந்த், வி.கே.சுந்தர் என அனைவரும் கொடுத்ததை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

அந்தவகையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை இந்தப்படத்தில் விரிவாக அலசியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

Leave a Reply

Your email address will not be published.