ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.

ஒரு நாள் மாலில் யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்துகிறார்கள். அங்கு வரும் நாயகியின் கழுத்தில் கத்தியை வைத்து பிராங்க் ஷோ நடத்துவதை அறிந்த கோடீஸ்வரர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார். அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று கூறுகிறார் ராதாரவி.

முதலாவதாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் தமிழகம் முழுக்க பிரபலமான பேசப்படவேண்டும்.. இரண்டாவதாக பைத்தியக்காரன் ஒருவனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து அவனை எம்எல்ஏ ஆக்க வேண்டும்.. மூன்றாவதாக ரயில்வே நிலையத்தில் ஒரு பெண்ணை கொள்ள வருபவனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்..

முதல் இரண்டு டாஸ்க்குகளையும் நண்பர்கள் இருவரும் வெற்றிகரமாக முடித்து விடுகின்றனர். மூன்றாவதாக ரயில் நிலையத்தில் கொல்லப்படப்போகும் பெண் யார், கொல்ல வருபவன் யார் என தெரியாத நிலையில் இவர்களால் அந்த பெண்ணை காப்பாற்ற முடிந்ததா..? இப்படி ஒரு டாஸ்க்கை ராதாரவி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன..? இதில் ராதாரவியின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிப்படம்..

சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் ஷிரின் பத்திரிகை நிரூபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அண்ணனாக வரும் அரவிந்த், வீட்டு ஓனராக வரும் மயில்சாமி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. ஒரு மாநிலத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும்போது ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கக்கூடாதா? போன்ற கிண்டலான கேள்விகளும், இனிமேல் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை, ஓட்டு எண்ணுபவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று வருங்கால அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் அறிவுரையும் காமெடியின் உச்சகட்டம்

ராதாரவி வழக்கம்போல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அழுத்தமானதாக இருந்தாலும் சாதாரணமாக ஊதித்தள்ளி விடுகிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவர் சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.

ஷபீரின் இசையும், யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

நடிகர் ரியோ ராஜ்
நடிகை ஷிரின் காஞ்வாலா
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்
இசை ஷபீர்
ஓளிப்பதிவு யு.கே.செந்தில்குமார்

Leave a Reply

Your email address will not be published.