சென்னை, ஜூன் 3- க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த பங்குகளின் மதிப்பு 166.51 கோடி ரூபாய் ஆகும். இந்த சம பங்குகள் முதன்மை உட்செலுத்துதல் மற்றும் இரண்டாம் நிலை கொள்முதல் மூலம் பெறப்படுகிறது. இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் தனது வர்த்தகத்தை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் விரிவுபடுத்துவதோடு பெண்களுக்கான புதிய டெனிம் ஆடைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனம் ‘க்ராஸ்’ என்னும் பெயரில் பெண்களுக்கான ஜீன்ஸ் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. முதன்மையாக இந்நிறுவனம் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேலாடைகள் மற்றும் கீழாடைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வடிவமைத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த வணிகத்தை இந்நிறுவனம் ஓரியண்டல் டிரேடிங் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்திற்கான வணிக பரிமாற்றத்திற்கு ஓரியண்டல் டிரேடிங் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரவி பஞ்சாபி, சுனில் பஞ்சாபி, சுஷில் பஞ்சாபி மற்றும் ஆத்மாராம் பஞ்சாபி ஆகியோர் ஒப்புதல் அளித்தனர். ‘க்ராஸ்’ பிராண்ட் ஆடைகள் இந்தியா முழுவதும் உள்ள 1000க்கும் மேற்பட்ட லைப்ஸ்டைல், பாண்டலூன்ஸ், ரிலையன்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லுலு மற்றும் இதன் 8 பிரத்யேக ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் கேவல் கிரண் ஆடைகள் 488க்கும் மேற்பட்ட பிரத்தியேக ஷோரூம்கள், 3,000க்கும் மேற்பட்ட மல்டி பிராண்ட் அவுட்லெட்டை உள்ளடக்கிய 80+ விநியோகஸ்தர்கள் மற்றும் இந்தியா முழுவதும் 2000க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
Leave a Reply