தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம்’ பொதுக்குழு செயற்குழு 2024-ம் ஆண்டு பேரவை கூட்டம், சென்னை வடபழனி சிகரம் ஹாலில், தலைவர் பி.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது!

இந்த பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களும், நடிகர்களுமான ரோபோ சங்கர், பிரியங்கா ரோபோ சங்கர், முத்துக்காளை, கிங்காங், சாரபாம்பு சுப்புராஜ், பாவா லட்சுமணன், ஜூலி பாஸ்கர், சூதுகவ்வும் சிவக்குமார், சாய் கோபி, சந்திரபாபு ஈஸ்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பி.பிரேம்நாத், தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவை வாசித்தார். அதில்…

மேடை நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.

ஒரு நடன கலைஞருக்கு மரணம் ஏற்பட்டால், தமிழக அரசு 5′ லட்சம் நிதி வழங்க வேண்டும்.

வயது முதிர்ந்த நடன கலைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்க வேண்டும்.

நடன கலைஞர்கள் வெளியூர் சென்று வர 50 சதவீதம் கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

சென்னை நகருக்குள் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுக்கின்றனர். அதற்கு அனுமதி வழங்க தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் சில இடங்களில் ஆபாச நிகழ்ச்சி நடக்கிறது. அதை தடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி கடந்த ஒரு வருடமாக தடை செய்துள்ளார். 2000 நடன கலைஞர்கள் வேலை இல்லாமல், பசி பட்டினியோடு வாழ்கிறார்கள். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. ஆகையால் தயவு கூர்ந்து இந்த தடையை நீக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேடை நடன கலைஞர்கள் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு மாதம், மாதம் 2000 வழங்க வேண்டும். தமிழக அரசு கல்லூரிகளில் மேடை நடன கலைஞர்களின் குழந்தைகளுக்கு இலவச சீட் வழங்க வேண்டும்.

மேடை நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் உயர திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘ஸ்டார் நைட் 2025’ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்குமாறு ஐந்து லட்சம் கலைஞர்கள் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதல்வர் ஆவதற்கு நாங்கள் தேர்தல் நேரங்களில் நடனமாடி கூட்டத்தைக் கூட்டுகிறோம். நீங்கள் வெற்றி பெற்ற பின்பு நாங்கள் நடனமாடி உங்களையும், மக்களையும் மகிழ்விக்கிறோம். ஆகையால் தாங்கள் கருணை உள்ளத்தோடு ‘ஐந்து லட்சம் நடன கலைஞர்களை காப்பாற்றுங்கள்’ என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்!

இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்க உள்ளனர்.

ரோபோ சங்கர் பேசுகையில், நடிகர் கிங்காங்’க்கு ‘கலைமாமணி’ விருது தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.