தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா கே.என் தயாரிப்பில், இயக்குநர் ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படம் ‘ஓம் சிவம்’. இதில் கதாநாயகனாக அறிமுக நடிகர் பார்கவ் நடிக்க, கதாநாயகியாக விரானிகா நடிக்கிறார். கன்னட சினிமாவில் மூன்று படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் விரானிகா இப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். ரவிகாளே மற்றும் ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, காக்ரோச் சுதி, யாஷ் ஷெட்டி, லக்ஷ்மி சித்தையா, அபூர்வஸ்ரீ, பல்ராஜ் வடி, உக்ரம் ரவி, வரதன், ரோபோ கணேஷ், ஹனுமந்தே கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
’ராஜ் பகதூர்’ பட புகழ் இயக்குநர் ஆல்வின் எழுதி இயக்கும் இப்படத்திற்கு விஜய் யார்ட்லி இசையமைக்கிறார். வீரேஷ் என்.டி.ஏ ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சந்தரையா படத்தொகுப்பு செய்கிறார். டாக்டர்.வி.நாகேந்திர பிரசாத், கவிராஜ், கவுஸ் பீர் ஆகியோர் பாடல்கள் எழுத, வி.நாகேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். கவுரவா வெங்கடேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மலவல்லி சாய்கிருஷ்ணா வசனம் எழுதுகிறார்.
தெலுங்குப் பதிப்பின் பாடல்களை ஸ்ரீராம் டபஸ்வி எழுத, தமிழ் பதிப்பின் பாடல்களை முத்தமிழ் எழுதுகிறார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் காதல் ஆக்ஷன் ஜானர் திரைப்படமான இதில், தற்போதைய இளைஞர்கள் காதலுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பதோடு, முதிர்ச்சி இல்லாத வயதில் வரும் காதலால் அவர்கள் எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதையும், அதே சமயம் அவர்கள் அந்த காதலில் வெற்றி பெற முடியாமல் போவதையும் பற்றி வித்தியாசமான கோணத்தில் பேசியிருக்கிறார்கள்.
நாயகனாக அறிமுகமாகும் பார்கவ், நடிகராக வேண்டும் என்பதற்காக நடிப்பு, நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் முறையான பயிற்சி பெற்றுள்ளாராம். படத்தில் அவரது நடிப்பு பாராட்டும்படி இருப்பதோடு, ஆக்ஷன் மற்றும் நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறாராம்.
மாண்டியா, மைசூர், தலி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்திருக்கும் படக்குழு தற்போது படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட இருப்பதோடு, இந்த வருடத்தில் படத்தையும் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் கிருஷ்ணா கே.என், தனது தீபா பிலிம்ஸ் நிறுவனம் மூலம் நான்கு படங்களை தயாரித்து வரும் நிலையில், அதில் முதலில் ‘ஓம் சிவம்’ திரைப்படத்தை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply