டாப்சி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அனந்தோ பிரம்மா’ என்கிற படத்தின் ரீமேக்தான் ‘பெட்ரோமாஸ்’. அதே கண்கள் புகழ் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, பிரேம், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், யோகிபாபு, காளிவெங்கட், முனிஸ் காந்த் ,ஸ்ரீஜா ரவி, மைம்கோபி ,பேய் கிருஷ்ணன் .பேபி மோனிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பெட்ரோமாஸ்’

கேரளா மழை வெள்ளத்தில் தன்னுடைய பெற்றோர் இறந்துவிட்டதாகக் கூறி, மலேசியாவில் வசிக்கும் ப்ரேம் இந்தியா வருகிறார். சென்னை அருகேயுள்ள மணிமங்கலத்தில் உள்ள வீட்டை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன..

வீட்டில் பேய்கள் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உடைக்க ஒரு 4 பேர், 4 நாட்கள் தங்கிவிட்டு கிளம்பினால் போதும் வீட்டை விற்று விடலாம் என கமிஷனுக்காக முனீஷ்காந்த் பிரேமிடம் கூறுகிறார். எதிர்பார்த்ததை விட அதிக கமிஷனை தருகிறேன் என பிரேம் கூற, பணத்தேவை அதிகமிருக்கும் முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 4 பேரும் அந்த வீட்டில் 4 நாட்கள் தங்க முடிவெடுக்கின்றனர். பேய் வீட்டிற்குள் நுழைந்த பின்னர் அவர்களது கதி என்ன? தமன்னா குடும்பத்தோடு பேயாக ஏன் அந்த வீட்டில் அலையவேண்டும்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? பிரேம் தனது பூர்வீக வீட்டை விற்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை

ஹாரர் படம் என்பதையும் கடந்து அடிப்படையில் மனித உணர்வுகளையும், பந்த பாசத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் குடும்ப படமாக வந்திருக்கிறது பெட்ரோமாக்ஸ். முதல் பாதியில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்து விடுகிறது பெட்ரோமாக்ஸ்.

பேயாக நடித்துள்ள தமன்னா அந்தக்குட்டிப் பெண், மீதுமுள்ள இரண்டு கேரக்டர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கான பின்கதையும் அந்த வீட்டை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்காததிற்கான காரணமும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகும் யோகி பாபுவும், மைனா நந்தினியும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்கள். ;தமன்னா எப்போதும் போல் கதைக்கான ஆழத்தை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி ஸ்கோர் செய்கிறார்.

முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 4 பேரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தான் உண்மையாகவே படம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்து பேய்கள் இருக்கும் வீட்டில் இவர்கள் செய்யும் ரகளை சிரிக்க வைக்கிறது. முனீஷ்காந்துக்குத்தான் இந்தப் படத்தில் அதிகக் காட்சிகள். மிக அழகாக அந்த பணியை செய்திருக்கிறார் முனீஷ்காந்த். இதயத்தில் ஓட்டை இருக்கும் இவர், பயம் வந்தால் பதட்டப்படாமல் சிரிக்க வேண்டும் என டாக்டர் சொல்லியிருப்பதால், பேய்களைப் பார்த்து அவர் சிரிக்கும் இடங்களில் நம்மாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

படத்தின் பெரும்பான்மையான இடமும் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், சலிப்பை ஏற்படுத்தாமல் படம் நகர்கிறது. டேனி ரேமண்டின் ஒளிப்பதிவு பெட்ரோமாக்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மனதில் தங்குகிறது.

மொத்தத்தில் குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது பெட்ரோமாக்ஸ்.

நடிகர்கள் : தமன்னா, முனிஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே
இயக்குனர் : ரோஹின் வெங்கடேசன்
இசை : ஜிப்ரான்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.