சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர்  நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஊரில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருகிறார். அந்த வழக்கில் ஜோதியின் சார்பில் ஆஜராகிறாள் பெத்துராஜின் மகள் வெண்பா (ஜோதிகா). சிறுமிகள் கொலையில் புதைந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர போராடுகிறார். இறுதியில் அவர் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா, அவருக்கும் அந்த சம்பவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கறிஞர் வேடத்திற்கான கம்பீரத்தை நடிப்பில் வெளிக்காட்டியிருக்கும் ஜோதிகா படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். நீதிமன்றத்தில் நீதிக்காக வாதாடும் காட்சியாக இருக்கட்டும், பெண் குழந்தைகள் பாலியல் கொடுமையை பற்றி கூறும் போதாக இருக்கட்டும் பார்ப்பவர்களின் கண்களின் ஓரத்தில் ஈரத்தை எட்டி பார்க்க வைத்துவிடுகிறார். நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டி அவர்களின் வேதனைகளை நம் கண் முன்னே நிறுத்திவிட்டார்.

அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் பார்த்திபன், தனது அளவான நடிப்பால் கவர்கிறார். கதாப்பாத்திரத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தாலும், சில இடங்களில் தனது ஸ்டைலை குறைவாக காட்டி ரசிக்க வைக்கிறார்.

வெண்பாவின் தந்தையாக பாக்யராஜ், நீதிபதியாக பிரதாப் போத்தன், இவருக்கு உதவியாக வரும் பாண்டியராஜன், ஊருக்குள் நல்லவராக வரும் வில்லன் தியாகராஜன் உள்ளிட்ட அனைவரும் படத்திற்கு சரியான கதாபாத்திர தேர்வு…

ராம்ஜியின் ஒளிப்பதிவு ஊட்டியை மிகவும் அழகாக காட்டியிருக்கிறது. நீதிமன்ற காட்சியையும் அழகுபடுத்தியுள்ளது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது. காட்சிகளை முந்திச்செல்லாமல் பயணிக்கும் பின்னணி இசையும், சில இடங்களில் நிலவும் அமைதியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

கதாப்பாத்திரங்களின் தேர்வு, அவர்களது நடிப்பு, கச்சிதமான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை என அனைத்தையும் கச்சிதமாக கையாண்டிருக்கும் இயக்குநர் இப்படத்தை விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பெண்கள் எப்படி இருக்க வேண்டும், என்று பாடம் நடத்தும் பெற்றோர்கள், தங்களது ஆண் பிள்ளைகளுக்கு எதை முக்கியமாக சொல்லிக் கொடுக்க வேண்டும், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக்.

மொத்தத்தில், ‘பொன்மகள் வந்தாள்’ குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.

நடிகர்கள் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன்,
ஒளிப்பதிவு ராம்ஜி
இசை கோவிந்த் வசந்தா
இயக்கம் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்.
மக்கள் தொடர்பு யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.