திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் தொடக்கமாக ‘சூது கவ்வும் 2 ‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேடை ஏறி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.