சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் OTTயில் வெளியாகி இருக்கும் ‘திரைப்படம் சூரரைப் போற்று’

ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே ‘சூரரைப் போற்று’

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் ராணுவப் பயிற்சிக்குத் தேர்வாகிச் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் சூர்யாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை. இதனால் விரக்தி அடையும் சூர்யா,

பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார். இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே ‘சூரரைப் போற்று’படத்தின் மீதிக்கதை.

சூரரைப்போற்று படத்தின் மூலம் சூர்யாவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. படம் முழுக்க சூர்யா வலம் வருகிறார். நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற யோசனை சூர்யாவுக்கு எப்படி வந்தது? என்று காட்டும் இடம் அருமை. எளிய மக்களுக்காக சூர்யா பேசும் வசனங்கள் அருமை.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தந்தையை காணச் செல்ல விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்கும் காட்சியாக இருக்கட்டும், மனைவி பொம்மியிடம்(அபர்ணா பாலமுரளி) கடன் கேட்க தயங்குவதாக இருக்கட்டும் சூர்யா அசத்தியிருக்கிறார்.

கதாநாயகி அபர்ணா பாலமுரளி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு அவர் போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என அனைத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்

தந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். படத்தின் வில்லன் பரேஷ் ராவல், அம்மா ஊர்வசி, சூர்யாவின் விமானப்படை மேலதிகாரி மோகன் பாபு, நண்பர்கள் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் மட்டுமல்ல சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பொம்மி அப்பா ஞானசம்பந்தம், சித்தப்பா கருணாஸ், டிஜிசிஎ அதிகாரி அச்யுத் குமார், ரேடியோ நிருபர் வினோதினி, சூர்யாவுக்கு முதல் வாய்ப்பு தந்து ஏமாற்றிய பிரகாஷ் பெலவாட் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய், நிறைவாய் நடித்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘காட்டுப பயலே…, உசுரே…’ பாடல்கள் உருக்குகிறது. பின்னணி இசையில் காட்சிகளின் உணர்வுகளை தன் இசையால் மேலும் மெருகூட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் நிகேத், படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, வசனகர்த்தா விஜய்குமார், காஸ்டியும் டிசைனர் பூர்ணிமா ராமசாமி என தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கும் இந்த சூரருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டும் ‘சூரரைப் போற்று’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை.

மொத்தத்தில் ‘சூரரைப் போற்று‘ விண்ணில் பறக்கும்

நடிகர்கள் – சூர்யா, பாலகிருஷ்ணா, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர்.
இசை – ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு – நிகேஷ்
இயக்கம் – சுதா கொங்கரா
தயாரிப்பாளர் – சூர்யா

Leave a Reply

Your email address will not be published.