மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகபதிபாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம். ‘நரசிம்ம ரெட்டி’ திரைக்கதை,இயக்கம்.: சுரேந்தர் ரெட்டி,, தயாரிப்பு : ராம் சரண்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட பல மாவீரர்களின் ஒருவர்தான் இந்த சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்கு முன்பே ஆங்கிலேயர்களை விரட்டியடித்து விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட ஒரு சிற்றசனின் வாழ்க்கை வரலாறுதான் ‘நரசிம்ம ரெட்டி’ திரைப்படம்.

ஆந்திராவில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்திய நிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் வணங்கியும் மரியாதையும் செலுத்தியும் வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்டச் சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. இதனால் அடுத்தடுத்து அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன.

தன்னோடு 60க்கும் மேற்பட்ட சிற்றரர்களை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் நரசிம்ம ரெட்டி. முதலில் மறுக்கும் அரசர்கள் மக்கள் இந்த போராட்டத்தில் இணைவதை கண்டு அவர்களும் போராடுகிறார்கள். இந்த சுதந்திர போராட்டத்தில் நரசிம்ம ரெட்டி யின் படை என்னவானது. நரசிம்ம ரெட்டி சந்தித்த துரோகம் என்ன, அவர் கடைசியில் என்னவானார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கமல்ஹாசன், அரவிந்த் சாமி ஆகியோரின் குரல் மனதை கவர்கிறது. சிரஞ்சீவிக்கு தமிழ்க் குரல் கொடுத்துள்ளார் அரவிந்த் சாமி. ரஜினியின் குரலைப் போல அரவிந்த் சாமியின் குரலிலும் ஒரு காந்த சக்தி இருப்பதால் அவருடைய குரல் பெரிய அளவில் மனதை கவர்கிறது. மதன் கார்கி வரிகளில் சுனிதி சாகன், ஸ்ரேயா கோசல் பாடிய ஓ சாயிரா பாடல், சங்கர் மகாதேவன், ஹரிசரண், அனுராக் குல்கர்னி பாடிய பாராய் நரசிம்மா நீ பாராய் பாடல், விஜய் பிரகாஷ், சாசா திருப்தி பாடிய அங்கம் உன்னிடம் பாடல், ஹரி சரண் பாடிய சுவாசமாகும் தேசமே பாடல் என்று மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. நான்கு பாடல்களும் ஓகே ரகமே.

நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி வாழ்ந்து இருக்கிறார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அவரது அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார். வீரம், காதல், இரக்கம், விட்டு கொடுத்தல், மக்களை ஒருங்கிணைப்பது என்று கதாபாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். இனி சைரா என்றாலே சிரஞ்சீவி முகம் தான் நினைவுக்கு வரும்.சைரா நரசிம்ம ரெட்டியின் குருவாக அமிதாப் வருகிறார். வழக்கம்போல நன்றாக நடித்துள்ளார். இவரை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஜான்சிராணியாக மிரட்டுகிறார் அனுஷ்கா.ராஜ பாண்டி என்ற தமிழ் மன்னனாக விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. நரசிம்மா ரெட்டியின் காதலியாக தமன்னா மற்றும் மனைவியாக நயன்தாரா என இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இரண்டாம் பாதியில் அரண்மனையில் வைத்து ஆங்கிலேயர்களுடன் நடைபெறும் சண்டைக்காட்சிகள் சிறப்பு. சுதந்திர போராட்ட காலத்து இந்தியா, போர் காட்சிகள் என தத்ரூபமாக படம் பிடித்து படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர். அன்றைய கால கட்டத்தில் இருந்த மூட நம்பிக்கைகளும், புனையப்பட்ட வேதங்களை போற்றும் அறியாமையும் படம் வெளிபடுத்தியிருந்தது.

நடிகர்கள்:சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா
இயக்குனர்:சுரேந்தர் ரெட்டி
தயாரிப்பாளர்:ராம் சரண்

Leave a Reply

Your email address will not be published.